ஒரே மேடையில் ஓபிஎஸ் உடன் ரஜினி, கமல்!

ஞாயிறு, 1 அக்டோபர் 2017 (11:12 IST)
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை அடையாறில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபத்தை இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இந்த விழாவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் வருகைபுரிந்தனர்.


 
 
முதலில் இந்த மணி மண்டப திறப்பு விழா நிகழ்வில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமை வகிப்பார் எனவும், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்துவைத்து, சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என்றும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது.
 
அதன் பின்னர் சிவாஜி குடும்பத்தின் கோரிக்கையை ஏற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு மணி மண்டபத்தை திறந்து வைப்பார் என தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது. இதனையடுத்து இன்று துணை முதலமைச்சர் ஓபிஎஸ் சிவாஜி மணிமண்டபத்தை திறந்து வைத்தார். இந்த விழாவுக்கு அரசு சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் 
கலந்துகொண்டனர்.

மேலும் அதிமுகவினர் சிவாஜி ரசிகர்களும் கலந்துகொண்டனர். தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், சிவாஜி குடும்பத்தினர், மூத்த நடிகர், நடிகைகள், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், சத்தியராஜ், விஜயகுமார் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
 
இந்த விழாவுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்தை துணை முதல்வர் ஓபிஎஸ் கை குலுக்கி வரவேற்றார். மணி மண்டபம் திறந்து அவரது படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தி முடிந்ததும், நடிகர் சிவாஜியின் நினைவுகளை பேசும்விதமாக மேடை அமைக்கப்பட்டது.
 
இந்த மேடையில் துணை முதல்வர், அமைச்சர்கள் நடிகர் பிரபு ஆகியோர் அமர்ந்திருந்தனர். நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் ஆகியோர் மேடையின் முன்புறம் பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்திருந்தனர். அவர்களை அமைச்சர் ஜெயக்குமார் மேடைக்கு அழைத்து, மேடையில் உள்ள இருக்கையில் அமர வைத்தார்.
 
இதன் மூலம் நடிகர்கள் ரஜினி, கமல் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். விரைவில் அரசியலுக்கு வருவதாக கூறி வரும் இந்த இரு நடிகர்களும் சமீப காலமாக தமிழக அரசை விமர்சித்திருந்தார்கள். இவர்களுக்கு அதிமுக அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வந்தனர்.
 
நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசையும், அமைச்சர்களையும் மிகவும் கடுமையாக விமர்சித்தார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பதிலடி கொடுத்தனர். ஆனால் இன்று இவர்கள் அனைவரும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். கமலுக்கு அமைச்சர் ஜெயக்குமாரும், ரஜினிக்கு துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் பொன்னாடை போர்த்தியது  குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்