ராடுமேன் எனப்படும் திருடனை கைது செய்த கோவை மாநகர தனிப்படை போலிசார்...

J.Durai

வியாழன், 11 ஜூலை 2024 (16:48 IST)
கோவை மாநகரில் ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய பகுதிகளில்  கொள்ளை சம்பவங்கள் அதிகம் நிகழ்வதாக எழுந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டதன் பேரிலும் வழிகாட்டுதலின் பேரிலும்  தனிப்படைகள் அமைக்கப்பட்டு மூன்று மாதங்களாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் கொள்ளை சம்பவங்களில்  மூளையாக செயல்பட்டு வந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த ராடுமேன்(எ) மூர்த்தி என்பவரை தனி படை போலீசார் கைது செய்துள்ளனர்.
 
இது குறித்து செய்தியாளர்களை  சந்தித்த கோவை வடக்கு மண்டல காவல்துறை துணை ஆணையர் ஸ்டாலின், கைது செய்யப்பட்டுள்ள ராடுமேன்(எ) மூர்த்தி என்பவர் மீது கோவையில் மட்டும் 18 கொள்ளை வழக்குகள் உள்ளதாகவும் தமிழகம் முழுவதும் 68 வழக்குகள் உள்ளதாகவும் தெரிவித்தார். 
 
இவரது குழுவில் ஏழு பேர் உள்ளனர் என தெரிவித்த அவர் தற்பொழுது மூர்த்தி மற்றும் ஹம்சராஜ் ஆகிய இருவரை கைது செய்துள்ளதாக கூறினார்.
 
இவர் ராடை பயன்படுத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுபவர் எனவும் முகமூடி அணிந்து கொண்டும் சட்டையின் மீது ஒரு  பையை போட்டுக் கொண்டு அதன் மேல் ஒரு சட்டையை போட்டுக்கொண்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவார் என தெரிவித்தார்.   
 
ராடை கொண்டு கதவை உடைத்தால் சத்தம் அதிகமாக வெளியே வராது எனவே அதனை பயன்படுத்தி இருக்கலாம் என கூறினார். 
 
ஒட்டன்சத்திரம் ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபரும் இவரே தான் எனவும் கோவை மாநகரில் சிங்காநல்லூர், பீளமேடு, துடியலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் இவர் மீது அதிகப்படியான வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார். 
 
தமிழகம் முழுவதும்  1500 சவரன் நகைகளையும்  கோவை மாவட்டத்தில் மட்டும் 376 சவரன் நகைகளை கொள்ளையடித்ததாகவும்  இரண்டு கார்கள் 13 லட்சம் விலை மதிப்புள்ள ஒரு பைக் மற்றும் பணத்தை கொள்ளை அடித்து இருப்பதாக தெரிவித்த அவர் பைக் மற்றும் இரண்டு கார்களை பறிமுதல் செய்துள்ளதாக கூறினார். 
 
மேலும் கொள்ளை அடிக்கும் நகைகளை உருக்கி அதனை விற்று அந்த பணத்தை எல்லாம் கொண்டு ராஜபாளையம் பகுதியில் சுமார் 4 கோடி மதிப்பில் ஸ்பின்னிங் மில் ஒன்றையும் வாங்கி அதில் முதலீடு செய்திருப்பதாக தெரிவித்தார். 
 
இவரது மனைவியும் இவர் செய்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகவும், ராஜபாளையம் காவல்துறையினர் சுரேஷ் என்பவரை பிடித்துள்ளதாகவும் மீதமுள்ள மூன்று பேரை பிடிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்த தனிப்படையினர் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்து கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளை வைத்து பார்க்கும் பொழுது அவர் முகமூடி அணிந்து இருந்ததால் ஒவ்வொரு சிசிடிவியிலும் பதிவாகி இருந்த கண், வாய் உள்ளிட்டவற்றை நன்கு கூர்ந்து கவனித்து ஓவியமாக ஒரு முகத்தை வரைந்து அதன் அடிப்படையில் தேட ஆரம்பித்து இவரை பிடித்துள்ளதாக கூறினார்.
 
மேலும் இவர்கள் ரயில் தண்டவாள பகுதிகள் என்றால் மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும், சிசிடிவி கேமராக்கள் இருக்காது, நாய்கள் உள்ளிட்டவை அதிகம் இருக்காது என்பதால் இவர்கள் ரயில்வே தண்டவாளங்களை ஒட்டியுள்ள வீடுகளில் மட்டும் நோட்டமிட்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவித்தார். 
 
மேலும் வீடுகளில் ஆட்கள் யாராவது இருந்தால் பிற மொழிகளில் ஓரிரு வார்த்தை பேசி வீட்டில் இருப்பவர்களை கட்டி போட்டு விட்டு கொள்ளை அடித்திருப்பதாக தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்