தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் மக்கள் பலர் உணவின்றி தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிக்கும் பொருட்டு இரண்டாம் கட்ட ஊரடங்கு முதல் சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவச உணவு அளிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது.
நான்காம் கட்ட ஊரடங்கு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் அதற்கு பிறகு இலவச உணவு அளிப்பது குறித்து அறிவிப்புகள் வெளியாகததால் இன்று முதல் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மொத்தம் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஊரடங்கு காலத்தில் சுமார் 1 கோடிக்கும் மேலானவர்கள் அம்மா உணவகங்கள் மூலமாக உணவு பெற்றதாக கூறப்பட்டுள்ளது.