காவிரியில் பாஜக இரட்டை வேடம்: அரசியல் செய்யும் பொன்னார்?

வியாழன், 22 செப்டம்பர் 2016 (11:38 IST)
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடமுடியாது என கர்நாடக அரசு மறுத்து வருகிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை மதிக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது அம்மாநில அரசு.


 
 
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காவிரி பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருவதாக குற்றம் சாட்டினார். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை மதிக்காமல், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடாமல் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது என்றார்.
 
காவிரி பிரச்சனையை பொறுத்துவரையில் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல பாஜகவும் தான் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என மல்லுக்கட்டுகிறது. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என அங்குள்ள ஆளும் கட்சியான கங்கிரஸுக்கு நெருக்கடி கொடுக்கும் எதிர் கட்சி பாஜக தான்.
 
கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் பாஜகவை சேர்ந்த எடியூரப்பா, சதானந்த கவுடா போன்றோர் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என கூறியது எல்லாம் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தெரியாதா?.
 
பாஜக மத்திய அமைச்சரே உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் ஒரு மாநில அமைச்சரை போல கர்நாடகத்துக்கு ஆதரவாக பேட்டியளிக்கிறார். தனது கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுக்காமல் அடுத்தவன் கண்ணில் இருக்கும் துரும்பை பற்றி பேசும் பொன்னாரின் இந்த கருத்து சரிதானா?.
 
முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து மக்களை திசை திருப்புகிறாரா மத்திய அமைச்சர் என்ற சந்தேகம் தான் எழுகிறது. காங்கிரஸ் அரசியல் செய்கிறது என கூறி தற்போது அவர்களுடன் சேர்ந்து நீங்களும் அரசியல் செய்வதை நிரூபித்து வீட்டீர்களே பொன்னார் அவர்களே.

வெப்துனியாவைப் படிக்கவும்