பண மோசடி புகார் - சிக்கலில் செந்தில் பாலாஜி

புதன், 22 ஜூன் 2016 (17:55 IST)
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

 
இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், கோபி என்பவர் தாக்கல் செய்த மனுவில், அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர் பணிக்காக, அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் அசோகன், கார்த்திக் ஆகியோர் ரூ.2.40 லட்சம் பெற்றனர். ஆனால், அவர்கள் கூறியபடி வேலையும் கிடைக்கவில்லை. பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இது குறித்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. எனவே, எனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
 
அப்போது, கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் எமிலியாஸ் கூறு, இது போன்று காவல் நிலையத்தில் 81 புகார்கள் உள்ளது. அதில், தேவசகாயம் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
 
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் திருமூர்த்தி, 'அமைச்சரை காப்பாற்றுவதற்காக, போலீசில் அளிக்கப்பட்ட புகாரில், அவரது பெயர் இல்லாமல் பார்த்து கொண்டனர்' என கூறியுள்ளார்.
 
இந்த மனுவை விசாரித்த, நீதிபதி பி.என்.பிரகாஷ், கடந்த 2015 ஜனவரி மார்ச் மாதத்தில் ரூ.2.31 லட்சம் அமைச்சரிடம் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது, ஆனால், பணம் கொடுத்த தேதியை குறிப்பிடவில்லை. ஊழல் தடுப்பு சட்ட வழக்கில், இது மிகவும் முக்கியம். இந்த வழக்கு தொடர்பாக, 12 பேர் கைது செய்யப்பட்டதாகவும், புலன் விசாரணை நடைபெற்று வருவதாக அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
 
மேலும், பணம் யாரிடம் கொடுக்கப்பட்டது என்ற தகவல் இல்லை. இதை விசாரிக்க வேண்டியது காவல்துறையின் கடமை.
 
எனவே, இந்த வழக்கை, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி ஆணையர் விசாரிக்க வேண்டும். துணை ஆணையர், கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்