கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் நாகர்கோவிலில் கோழிக்கறி கடை ஒன்றில் பணி புரிந்து வந்திருக்கிறார். ஊரடங்கு காரணமாக தற்போது அவருக்கு வேலை இல்லாததால் அவரது குடும்பமே வறுமையில் வாடியுள்ளது. அவருக்கு 8 வயதில் ஒரு மகளும், மனநிலை பாதிக்கப்பட்ட மனைவியும் உள்ளனர்.
இந்நிலையில் வீட்டின் வறுமை உணர்ந்த சிறுமி பக்கத்தில் உள்ள வீடுகளில் உதவி கேட்க சென்றதாக கூறப்படுகிறது. தன் தந்தையிடம் சென்ற சிறுமி அக்கம்பக்கத்தினர் தனக்கு பணம் கொடுத்ததாகவும், அதே சமயம் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியைடைந்த தந்தை அந்த பகுதியில் உள்ள முக்கிய நபர் ஒருவர் மூலமாக இதுகுறித்து குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி நடவடிக்கையில் இறங்கிய குளச்சல் அனைத்து மகளிர் போலீஸார் தனிப்படை அமைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை கைது செய்துள்ளனர்.
சிறுமியின் வாக்குமூலம் படி முகமது நூகு, சகாய தாசன், ஜாகீர் உசேன், அப்துல் ஜாபர் ஆகிய நான்கு பேரும், 15 வயது சிறுவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இரண்டு சிறுவர்களும் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். உதவி கேட்டு சென்ற சிறுமிக்கு நடந்த கொடூர சம்பவம் கன்னியாக்குமரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.