கட்டிங் போட்டுட்டு பாலத்துக்கு அடியில் படுத்த குடிமகன்! விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி! - திருச்சியில் திக்திக் சம்பவம்!

Prasanth Karthick

வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (10:32 IST)

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் பாலத்தின் அடியில் மாட்டிக் கொண்ட நபரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

 

 

கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் மேட்டூர் அணை முழுவதுமாக நிரம்பி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதை தொடர்ந்து காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடி வருகிறது. அவ்வாறாக திருச்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் இன்று தண்ணீர் வந்த நிலையில் கொள்ளிடம் ஆற்று பாலத்தின் கீழ் ஒருவர் தண்ணீரில் சிக்கிக் கொண்டிருந்ததை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 

அங்கு விரைந்து வந்த அவர்கள் பாலத்தின் தூண் அருகே சிக்கிக் கொண்டு நின்ற அந்த வயதான நபரை கீழே இறங்கி கயிறு போட்டு தூக்கி பத்திரமாக மேலே கொண்டு வந்தனர். விசாரித்ததில் அவர் அப்பகுதியை சேர்ந்த 56 வயதான சசிக்குமார் என தெரிய வந்துள்ளது. கூலித் தொழிலாளியான சசிக்குமார் தினம்தோறும் வேலை முடிந்ததும் மது அருந்திவிட்டு பாலத்தின் கீழ் வந்து படுப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

 

நேற்றும் அவ்வாறாக வந்து படுத்தவர் காலை எழும்போது தன்னை சுற்றி தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அவரை மீட்ட தீயணைப்பு துறையினர் அவருக்கு அறிவுரைகள் சொல்லி அனுப்பி வைத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்