ஜெயலலிதா பிரதமராக பகல் கனவு காண்கிறார் - பிரேமலதா

திங்கள், 31 மார்ச் 2014 (15:50 IST)
ஜெயலலிதா தமிழ்நாட்டின் 40 தொகுதியை வைத்துக்கொண்டு நான்தான் பிரதமர் என்று பகல் கனவு காண்கிறார் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
 
விழுப்புரம் தேமுதிக வேட்பாளர் உமாசங்கரை ஆதரித்து பிரேமலதா மரக்காணத்தில் பிரசாரம் செய்தார்.
 
அவர் பேசியதாவது, தேமுதிக அமைத்துள்ள கூட்டணி புது கூட்டணி, தமிழ்நாடு மக்கள் விரும்பிய கூட்டணி, முதல் வெற்றி அணி கூட்டணி. லஞ்சம், ஊழலற்ற ஆட்சியை அமைக்க திறமையுள்ளவர் நரேந்திரமோடி.
 
விழுப்புரம் தேமுதிகவின் கோட்டை. இங்குதான் உளுந்தூர்பேட்டையில் லஞ்சம் ஒழிப்பு மாநாடு நடத்தி காட்டினோம். ஜெயலலிதா தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளாக எந்த திட்டத்தையும் செய்யவில்லை. தமிழ்நாட்டில் மின்வெட்டு, தண்ணீர் இல்லை. டாஸ்மாக் கடைகள்தான் அதிகமாக திறந்துள்ளார். டாஸ்மாக் கடையில் ரூ.24 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது.
 
ஜெயலலிதா 40 தொகுதிகளை வைத்துக்கொண்டு பிரதமராக வேண்டி ஓட்டு கேட்கிறார். ஆனால் 272 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான் பிரதமராக முடிவும். ஆனால் ஜெயலலிதா தமிழ்நாட்டின் 40 தொகுதியை வைத்துக்கொண்டு நான்தான் பிரதமர் என்று பகல் கனவு காண்கிறார்.
 
நரேந்திரமோடி பிரதமரானால் தமிழ்நாட்டில் மீனவர் பிரச்சனை தீர்க்கப்படும். மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். நதிகள் இணைப்பு நடைபெறும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அனைவருக்கும் தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்படும் என்று அவர் பேசினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்