பெற்ற மகளை இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த தந்தை குற்றவாளி என கோவை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட தந்தைக்கு வரும் 28ஆம் தேதி நீதிமன்றம் தண்டனை அளிக்க உள்ளது.
கோவை புலியகுளத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பழனிச்சாமி (45)- கலாமணி தம்பதிக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். சம்பவத்தன்று கலாமணி இரவு வேலைக்கு சென்றுவிட்டார். எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்த மகள் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பழனிச்சாமி, தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
2007ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டுவரை பலமுறை மகளை பாலியல் பலாத்காரம் செய்ததால், பிளஸ்2 படித்து வந்த போது மகள் கர்ப்பம் ஆனாள். கருச்சிதைவுக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தந்தையின் குடிவெறியினால் பாதிக்கப்பட்ட மகள், கோவை புலியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
கோவை ராமநாதபுரம் மகளிர் போலீசார் ஆட்டோ டிரைவர் பழனிச்சாமி மீது கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல் ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மருத்துவ பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதுடன், ஆட்டோ டிரைவரின் மகள் நீதிபதியிடம் பாலியல் பலாத்காரம் குறித்து வாக்குமூலம் அளித்தார்.
இந்த நிலையில் பழனிசாமியின் மகளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த வழக்கினால் தன்னுடைய மணவாழ்க்கை பாதிக்கப்பட கூடாது என்பதற்காக நடந்த சம்பவங்களை மறுத்து கூறி பிறழ்சாட்சியாக மாறினார். ஆட்டோ டிரைவரின் மனைவி கலாமணி, மகன் ஆகியோரும் பிறழ்சாட்சியாக மாறினர்.
இருந்தாலும் பெண் நீதிபதியிடம் பழனிச்சாமியின் மகள் அளித்த வாக்குமூலம் மற்றும் மருத்துவ பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை ஆதாரமாக கொண்டு இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.பி.சுப்பிரமணியம் முன்னிலையில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, குற்றம்சாற்றப்பட்ட ஆட்டோ டிரைவர் பழனிச்சாமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி சுப்பிரமணியம், ''இந்த வழக்கில் கற்பழிப்பு மற்றும் கொலை மிரட்டல் ஆகியவை அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து என்ன கூறுகிறீர்கள்?'' என்று பழனிசாமியிடம் கேட்டார்.
அப்போது பழனிச்சாமி, 'நான் எந்த தவறும் செய்யவில்லை. என்னுடைய மகளையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். எனவே என்மீது கருணை காட்டி தண்டனை வழங்க வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்று ஆட்டோ டிரைவர் பழனிச்சாமிக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது. பெற்ற மகளையே 2 ஆண்டுகளாக கற்பழித்த தந்தைக்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால்தான் மற்றவர்களுக்கு இந்த தண்டனை ஒரு பாடமாக அமையும்.