அரசு பஸ் டி‌க்கெ‌ட் முன்பதிவு 60 நாளாக நீட்டிப்பு

புதன், 5 செப்டம்பர் 2012 (09:04 IST)
அரசு பஸ்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலம் 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியினை தற்பொழுது நடைமுறையில் உள்ள 30 நாட்களை, 4.9.2012 முதல் 60 நாட்களாக விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இனிவரும் காலங்களில் பயணிகள் தங்கள் முன்பதிவினை 60 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் பயணிகளின் நலன்கருதி சென்னையில் இருந்து புறப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு மூலம் பெருங்களத்தூர் மற்றும் மேல்மருவத்தூர் ஆகிய இடங்களில் ஏறும் வசதி 4.9.2012 முதல் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.

இதனால் புறநகர் பகுதியில் வசிக்கும் முன்பதிவு செய்த பயணிகள் இனிவரும் காலங்களில் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு செல்ல தேவையில்லை.

மேலும் சென்னை மற்றும் அனைத்து மாவட்டங்களிலும், முக்கிய நகரங்களிலும் பயணிகள் முன்பதிவு செய்ய தற்போது இயங்கி வரும் 50 முன்பதிவு மையங்கள் வரும் காலங்களில் 300 மையங்களாக அதிகரிக்கப்படும்.

பயணிகள் இணையதளம் (www.tnstc.in) வழியாகவும் மற்றும் அலைபேசி வழியாகவும் (மொபைல் டிக்கெட்டிங்) 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் மூலம் அனைத்து தமிழ்நாடு போக்குவரத்துக்கழக நெடுந்தூர பேருந்துகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்