சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 53 ஆனது - புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
செவ்வாய், 20 டிசம்பர் 2011 (08:53 IST)
WD
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. புதியதாக நியமிக்கப்பட்டுள்ள 4 நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக கே. ரவிசந்திர பாபு, பி. தேவதாஸ், ஆர். கருப்பையா, எஸ். விமலா ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்தில் பிறந்த கே.ரவிச்சந்திரபாபு, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்தார். சட்டக் கல்வியை சென்னை சட்டக்கல்லூரியில் முடித்தார். 26.4.84 அன்று வழக்கறிஞரானார். மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தியின் ஜுனியராக 12 ஆண்டுகள் செயல்பட்ட ரவிச்சந்திரபாபு, தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞரான பணி புரிந்தார்.
2000ஆம் ஆண்டில் மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞரான நியமிக்கப்பட்ட ரவிச்சந்திரபாபு, பின்னர் மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர்கள் குழுவில் நியமிக்கப்பட்டு, பல்வேறு துறைகளுக்காக உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். ரவிச்சந்திரபாபுவுக்கு, ஆர்.சசிகலா என்ற மனைவியும், ஆர்.பிரீத்தா என்ற மகளும், ஆர்.விஷ்ணுகுமார் என்ற மகனும் உள்ளனர். இவர் செங்குந்தர் இனத்தைச் சேர்ந்தவர்.
விருதுநகர் மாவட்டம், நத்தைகுளம் என்ற கிராமத்தை சேர்ந்த பி.தேவதாஸ், சென்னையில் பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகியவற்றில் பட்டம் படித்தார். சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் படித்தார். சட்டக் கல்வியில் முதுகலை (எம்.எல்.) முடித்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட முன்சீபாக இவர் 16.5.86 அன்று பணியில் சேர்ந்தார். 1992ஆம் ஆண்டு சப் ஜட்ஜ் ஆனார். எழும்பூர் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய அவர் 1998ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். நிதி நிறுவன மோசடி வழக்குகள் நீதிமன்றம், தொழிலாளர்கள் நீதிமன்றம், தடா நீதிமன்றம், பொடா நீதிமன்றம், குடும்பநல நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களில் பல மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார். இறுதியாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவருக்கு டி.சரஸ்வதி என்ற மனைவியும், டி.கார்த்திகேயன், டி.நவீன்குமார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த பணிக்கனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஆர்.கருப்பையா. இந்திய தேசிய படையின் உறுப்பினரும் விடுதலைப் போராட்ட வீரருமான டி.ராமன் ராக்கம்மாள் தம்பதியரின் மகனாக 7.4.53 அன்று பிறந்தார். மதுரை சட்டக்கல்லூரியில் சட்டம் படித்தார். 17.6.81 அன்று வழக்கறிஞராக பதிவு செய்தார்.
மாவட்ட முன்சீபாக நீதித்துறையில் காலடி எடுத்து வைத்தார். 1999ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதியானார். முதன்மை மாவட்ட நீதிபதியாக நாமக்கல், ஊட்டி, கன்னியாகுமரி, நெல்லை, மதுரை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார். கடைசியாக சென்னை சிறுவழக்குகள் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றினார். இவருக்கு உமாராணி என்ற மனைவியும், அபிலாஷ் பிரபு என்ற மகனும், புவன்யா ரம்யா என்ற மகளும் உள்ளனர்.
கடலூர் மாவட்டம் வீராணநல்லூரை சேர்ந்தவர் எஸ்.விமலா. திருச்சி சீதாலட்சுமி ராமசாமி மகளிர் கல்லூரியில் பட்டம் படித்தார். சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் படித்தார். 16.3.83 அன்று வழக்கறிஞரானார். 16 ஆண்டுகள் வழக்கறிஞராக பணிபுரிந்த இவர், 3.12.99 அன்று மாவட்ட நீதிபதியானார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.எல். பட்டம் பெற்றார். 2006-08ஆம் ஆண்டில் தமிழ்நாடு நீதித்துறை பயிற்சிக்கழக இயக்குனராக எஸ்.விமலா நியமிக்கப்பட்டார். அகில இந்திய அளவில் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் இவர்தான்.
16.2.10 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளராக நியமிக்கப்பட்டார். இந்தப் பிரிவில் 20 மாத காலம் பணியாற்றி மிகப்பெரிய அளவில் சீர்திருத்தங்களை செய்தார். குடும்பநல நீதிமன்றங்கள், விடுமுறைகாலத்திலும் இயங்குவதற்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவை, வெற்றிகரமாக்கியது இவரது சிறந்த பணியாகும். சென்னை உயர் நீதிமன்றத்தில் 150வது ஆண்டு தொடக்க விழா ஏற்பாடுகளும் இவரது தலைமையில் சிறப்பாக செய்யப்பட்டன. இவரது கணவர் ஏ.எஸ்.வேல்முருகன் வழக்கறிஞராக இருந்தார். இவர்களுக்கு வே.விவேக் என்ற ஒரு மகன் உள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் பணியிடம் மொத்தம் 60 உள்ளன. 49 நீதிபதிகள் தற்போது பணியாற்றுகின்றனர். இன்று காலை 10.40 மணிக்கு கூடுதல் நூலகக் கட்டிடத்தில் இந்த 4 பேரும் பதவி ஏற்கின்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
அதைத் தொடர்ந்து நீதிபதிகளின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 6 பெண் நீதிபதிகள் உள்ள நிலையில் எஸ்.விமலா பதவி ஏற்றதும் இந்த எண்ணிக்கை 7 ஆக உயர்கிறது.
தற்போது சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை பதிவாளராக, கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.