'உணவு உற்பத்தியில் நல்ல நிலையில் உள்ளது இந்தியா'

திங்கள், 28 நவம்பர் 2011 (10:27 IST)
இந்தியா தற்போது உணவு உற்பத்தியில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நல்ல நிலையில் உள்ளதாக கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக துணை வேந்தர் முனைவர் பி.முருகேசபூபதி கூறினார்.

webdunia photo
WD
19 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியில் கடந்த 24 ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டின் நிறைவு விழா நேற்று கல்லூரியின் வேதநாயகம் கலையரங்கத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணை தலைவர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் துணை வேந்தர் முனைவர் பி.முருகேசபூபதி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறந்த ஆய்வுகட்டுரைகளை படைத்த மாணவ, மாணவிகளுக்கு கேடயம் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசுகை‌யி‌ல், இந்தியா தற்போது வேளாண்மை துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது வருடத்திற்கு இந்தியாவில் இருந்து 5 லட்சம் டன் பாசுபதி அரிசியும், 6 லட்சம் டன் பருத்தியும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. பயிர் உற்பத்திக்கு 16 காரணிகள் தேவை என்பதை கண்டுபிடித்து அதன்படி செயல்பட்டு வருகிறது. தற்போது வருடத்திற்கு 8 மில்லியன் டன் உரத்தை நிலத்திற்கு அளித்து வருகிறோம்.

இதை முறையாக்க வேண்டும். இதற்கு மண் ஆய்வு செய்து அதற்கேற்ற உரத்தை அளித்து மண் வளத்தை காக்கவேண்டியது முக்கியம். அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆய்வு நிலையத்தில் 36 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர். இதேபோல் 38 சதவீதம் பேர் டாக்டர்களாகவும் பணியாற்றி வருகின்றனர் எ‌ன்று முருகேசபூபதி பேசினார்.

விழாவில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லõரியின் தலைமை செயல்அதிகாரி முனைவர் ஏ.எம்.நடராஜன் முன்னிலை வகித்து பேசினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவர் வி.உமாசங்கர் அனைவரையும் வரவேற்றார். மாநில செயலாக்க குழு உறுப்பினர் கே.காத்தவராயன் மாநாட்டு ஆய்வறிக்கையை வாசித்தார். இறுதியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.வைரமுத்து நன்றி கூறினார்.

மாநாட்டில் மொத்தம் 29 மாவட்டங்களை சேர்ந்த 105 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு 196 ஆய்வறிக்கைகள் சமர்பிக்கப்பட்டது. இதில் திண்டல் யு.ஆர்.சி., மெட்ரிக்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பரிசுபெற்றனர்.

விழாவில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஏ.சண்முகம், பண்ணாரி அம்மன் வித்யா நிகேதன் பள்ளியின் மக்கள் தொடர்பு அதிகாரி ஏ.என்.குழந்தைசாமி, பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையில் துணை தலைவர் ஈ.மணிவேல் உட்பட பலர் பலர் கலந்துகொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்