தூக்கு தண்டனை நிறைவேற்றுவது அநீதி: ராம் ஜேத்மலானி வாதம்

செவ்வாய், 30 ஆகஸ்ட் 2011 (14:40 IST)
FILE
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்களை 11 ஆண்டுகள், 4 மாதங்களுக்குப் பிறகு நிராகரித்துவிட்டு, அவர்களை தூக்கில் ஏற்றுவது அநீதியானது என்று பிரபல சட்ட நிபுணர் ராம் ஜேத்மலானி வாதிட்டார்.

தூக்கு தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தனை ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்தை எதிர்த்து, இம்மூவரில் சார்பில் மூத்த வழக்குரைஞர் சந்திரசேகர் தொடர்ந்த வழக்கு இன்று காலை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாரணயனா ஆகியோர் கொண்டு நீதிமன்ற அமர்வு முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது.

அப்போது பேரறிவாளன் சார்பில் நீதிமன்றத்தில் நேர் நின்ற மூத்த வழக்குரைஞர் ராம் ஜெத்மலானி, “இவர்களுக்கு 1999ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. அவர்களின் கருணை மனு 2000வது ஆண்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதன் மீது உடனடியாக முடிவு எடுத்துத் தெரிவிக்காமல், 11 ஆண்டுகள், 4 மாதங்கள் தாமதித்து, கருணை மனுக்களை நிராகரித்துள்ளார்கள். இத்தனை வருடங்களும் இந்த மூன்று பேரும் எத்தனை முறை செத்துச் செத்துப் பிழைத்திருப்பார்கள். அவர்களின் கருணை மனு 2000வது ஆண்டிலேயே நிராகரிக்கப்பட்டிருந்தால், அவர்கள் தூக்கு மரத்தில் ஏற்றப்பட்டிருந்தால், அவர்களின் உயிர் 5 விநாடிகளில் பிரிந்திருக்கும். மின்சார நாற்காலியில் அமர்த்தி தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அது ஒரு மணி நேரத்தில் உயிரைப் பறித்திருக்கும். அந்த மரண வேதனை இவர்கள் மூவரும் 11 ஆண்டுக்காலத்திற்கும் மேலாக அனுபவித்துள்ளனர். அவர்கள் அனுபவித்த மன வலி (mental agony) மரண தண்டனையை விட அதிகமானது.

அது மட்டுமல்ல, கொலை நடந்து, விசாரணைக்காக இவர்கள் கைது செய்யப்பட்ட நாள் முதல் இவர்கள் மூவரும் இதுவரை 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சிறையில் இருந்துள்ளார்கள். இரு ஆயுள் தண்டனைக் காலத்தை விட அதிகமானதாகும். இந்த நிலையில், இவர்களின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட காரணத்திற்காக தூக்கிலிட்டால், அது ஒரு குற்றத்திற்காக இரண்டு தண்டனை (Double Jeopardy) ஆகாதா?” என்று ராம் ஜேத்மலானி வாதிட்டார்.

சாந்தன், முருகன் ஆகியோருக்காக வாதிட்ட மூத்த வழக்குரைஞர் காலின் கன்சால்வஸ், பஞ்சாப் முதல்வராக இருந்த பிரகாஷ் சிங் கெய்ரோன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கபட்ட தயா சிங் என்பவரின் கருணை மனுவை 4 ஆண்டுகள் தாமதித்து நிராகரித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம், தாமத்தத்திற்கு நியாயமேதுமில்லை என்று கூறி, அவருடைய மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தை சுட்டிக்காட்டி, இந்த மூன்று பேரின் கருணை மனுக்கள் 11 ஆண்டுக்காலம் கழித்து நிராகரிப்பட்டதை எடுத்துக் கூறினார். இவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதே நியாயம் என்று வாதிட்டார்.

தனது வாதத்திற்கு சான்றாக மது மேத்தா வழக்கையும் கன்சால்வஸ் எடுத்துரைத்து வாதிட்டார்.
இவர்களின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்குரைஞர் வைகை, 20 ஆண்டுக்காலம் சிறையில் இருக்கும் இம்மூவரை, இதற்கு மேல் தூக்கில் போடுவது நியாயமற்றது என்று வாதிட்டார்.

மூத்த வழக்குரைஞர்களின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், மரண தண்டனை கைதிகளின் மனுக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்றும், தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு 8 வார காலத்திற்கு தடை விதித்தும் உத்தரவிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்