கருணாநிதிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றார் ஜெயலலிதா

வியாழன், 23 ஜூன் 2011 (10:45 IST)
முன்னாள் முதலமைச்ச‌ரு‌ம், ‌தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கை, முதலமைச்சர் ஜெயலலிதா ‌திரு‌ம்ப பெற்றுக்கொண்டார்.

நாடாளுமன்ற வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலையை நிறுவுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் பற்றி முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 22.11.06 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்து இருந்தார்.

இந்த அறிக்கை தன்னை அவதூறு செய்வதாக கூறி, ஜெயலலிதா மீது, கருணாநிதி வழக்கு தொடர்வதற்கு அனுமதி அளித்து 28.12.06 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதனடிப்படையில் கருணாநிதி சார்பில் அப்போதைய சென்னை நகர குற்றவியல் அரசு வழ‌க்க‌றிஞ‌ர் 12.1.07 அன்று ஜெயலலிதா மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஜெயலலிதா 17.1.07 அன்று மனு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கில் பொதுத்துறை செயலாளர், சென்னை நகர குற்றவியல் அரசு வழ‌க்க‌றிஞ‌ர், கருணாநிதி ஆகியோரை பிரதிவாதியாக ஜெயலலிதா சேர்த்திருந்தார். அந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி பி.ஜோதிமணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், வழக்கை திரும்பப் பெற்றுக்கொள்ள மனுதாரர் விரும்புவதாக கூறினார்.

அதைத்தொடர்ந்து நீதிபதி பி.ஜோதிமணி, 'ஜெயலலிதா தொடர்ந்துள்ள வழக்கை திரும்ப பெறுவதாக அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் வாதிட்டார். அதற்கான மனுவையும் அவர் தாக்கல் செய்தார். வழக்கு வாபஸ் பெறப்படுவதை அடுத்து, அந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்திருந்த மனு ‌நிராக‌ரி‌க்க‌ப்படு‌கிறது' என்று உத்தரவு பிறப்பித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்