1, 6ஆம் வகுப்புக்கு சமச்சீர் கல்வியை தொடர உச்ச நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய், 14 ஜூன் 2011 (15:57 IST)
1ஆம் வகுப்பு, 6ஆம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை தொடர வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடைகோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.எஸ்.செளகான், சுதந்திரகுமார் ஆகியோர் முன்பு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது, சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசின் வழக்கறிஞர் வாதிட்டார்.
ஆனால் மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத் தலைவர் வெங்கடேஷ், மனித உரிமை பாதுகாப்பு மைய சென்னை சங்கத் தலைவர் சுரேஷ் ஆகியோர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க கூடாது என்றனர்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 1ஆம் வகுப்பு, 6ஆம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை தொடர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி தேவையா என்பது பற்றி ஆராய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என்றும் நிபுணர் குழு 3 வாரத்தில் அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நிபுணர் குழு அறிக்கையை சென்னை உயர் நீதிமன்றம் தினமும் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழக தலைமைச் செயலர் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த குழுவில் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் 2 அதிகாரிகளும், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2 அதிகாரிகளும், கல்வித்துறை செயலரும், பள்ளிக்கல்வித்துறை செயலரும் இடம் பெற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.