தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு

வியாழன், 23 டிசம்பர் 2010 (11:08 IST)
தமிழில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய‌க் கோ‌ரி செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு‌த் தொடர‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சென்னை மணலியைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரி எம்.ஆர்.விஜயலட்சுமி எ‌ன்பவ‌ர் தாக்கல் செய்த மனுவில், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று 30.9.2010 அன்று அரசு ஆணையிட்டுள்ளது.

மருத்துவம், கால்நடை, வனத்துறை சம்பந்தமான படிப்புகள் தவிர, பல்கலைக் கழகங்கள், இதர கல்விநிலையங்களில் இளங்கலை, முதுகலை படிப்புகள் அனைத்தும் தமிழ், ஆங்கில வழியில் கற்பிக்கப்படுகின்றன.

இவ்வாறு இருக்கும் போது தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் 20 சதவீதம் இடஒதுக்கீடு அளித்தால் மற்ற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இது சட்ட விரோதமானது.

நானும் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்தேன். அதன்பிறகு பட்டப்படிப்பில் பகுதி ஒன்றில் தமிழை ஒரு மொழிப் பாடமாக படித்துள்ளேன். இந்தத் தகுதியே, அரசுத் துறைகளில் பணியாற்ற போதுமானது ஆகும். எனவே, தமிழில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எ‌ன்ற மனுவில் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இ‌ந்த மனு அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு ‌விசாரணை‌க்கு எடு‌த்து‌க் கொ‌ள்ள‌ப்படு‌ம் எ‌ன்று ‌நீதிபதி ஜோதிமணி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்