கால்வாயில் ஆட்டோ கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் நீரில் மூழ்கி பலி
வெள்ளி, 15 ஜனவரி 2010 (15:33 IST)
சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் சென்னையை அடுத்த பெரியபாளையம் அருகே ஆட்டோ கால்வாயில் கவிழ நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை மாங்காடு அருகே வசிப்பவர் ஆட்டோ ஓட்டுனர் கோவிந்தராஜ், இவருக்கு வயது 35. இவரது மனைவி, மாமியார் மற்றும் இன்னும் சில உறவினர் ஆகியோருடன் சரவணன், வேலு என்ற 8 மற்றும் ஒரு வயது சிறார்களும் அடங்கிய குடும்பத்துடன் பட்லூர் அங்காளம்மன் கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றனர்.
அதன் பிறகு அனைவரும் அதே ஆட்டோவில் நேற்று இரவு 8 மணிக்கு பெரியபாளையம் கோவிலுக்குச் சென்றனர். அப்போது கால்வாய் அருகே சென்ற போது ஆட்டோ எதிர்பாராத விதமாக கால்வாயில் கவிழ்ந்தது.
இதில் 6 பேரும் பலியானார்கள். காலையில் கால்வாயில் ஆட்டோ மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் காவல்துறைக்குத் தகவல் அனுப்பினர்.
தீயணைப்புப் படையினர் ஒரே ஒரு உடலை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. மீதி 5 பேரின் உடல்களையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.