கூவம் ஆற்றை சு‌த்த‌ப்படு‌த்‌தி சுற்றுலா இடமாக மாற்றுவோம்: மு.க.ஸ்டாலின்

வெள்ளி, 27 நவம்பர் 2009 (10:36 IST)
"கூவம் ஆற்றை சுத்தப்படுத்தி, ஆற்றங்கரை பகுதியை சுற்றுலா இடமாக மாற்றுவோம்'' என்று சிங்கப்பூர் சென்று திரும்பிய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சிங்கப்பூரில் 4 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, நேற்று இரவு 10 மணி அளவில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்.

விமான நிலையத்தில் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், சென்னையில் ஓடும் கூவம் நதியை சுத்தப்படுத்தி சீரமைத்தல், சென்னையில் நிதி நகரம், தொழில் நகரம், வானூர்தி பூங்கா போன்றவை அமைக்கப்படும் என்று, முதலமைச்சர் கருணாநிதி அனுமதியுடன் சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவித்து இருந்தேன். அதன்படி, இந்த திட்டங்கள் பற்றி ஆய்வு நடத்துவதற்காக சிங்கப்பூர் சென்று இருந்தேன்.

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் வானூர்தி பூங்காவை பார்வையிட்டேன். சிங்கப்பூரில் நமது கூவத்தை விட மிக மோசமாக ஓடிக்கொண்டிருந்த நதியை 10 ஆண்டுகளில் சுத்தப்படுத்தி அதன் இரு கரைகளிலும் பூங்காக்கள், அங்காடி மற்றும் பொழுது போக்கு பூங்காக்களை அமைத்து சிறந்த சுற்றுலா இடமாக மாற்றி இருக்கிறார்கள்.

சென்னையிலும் கூவம் ஆற்றை சுத்தப்படுத்தி சிங்கப்பூரை போன்று சிறந்த சுற்றுலா இடமாக மாற்றி அமைக்கப்படும். அதுகுறித்து சிங்கப்பூர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். சிங்கப்பூர் தொழில் வர்த்தக துறை மூத்த அமை‌ச்ச‌ர் ஈஸ்வரன், இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான ஆலோசனைகளை தெரிவித்தார் எ‌ன்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்