பிரதமரை சந்திக்காதது ஏன்: திருமாவளவன் விளக்கம்

சனி, 24 அக்டோபர் 2009 (14:01 IST)
இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்த ஆய்வு அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பிக்கச் சென்ற தமிழக எம்.பி.க்கள் குழுவினருடன் தாம் செல்லாதது ஏன் என்று திருமாவளவன் இன்று விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று அளித்துள்ள விளக்கத்தில், பிரதமரை சந்திப்பதற்காக தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதால் இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்த ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க தாம் செல்லவில்லை என்றும், இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இலங்கைக்குச் சென்று தமிழர்களின் நிலை குறித்து நேரில் ஆய்வு செய்தது.

5 நாட்கள் சுற்றுப்பயணம் செய்த தமிழக எம்.பிக்கள் குழு, அந்நாட்டு அதிபர் ராஜபக்ச மற்றும் உயரதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தியது. அக்குழுவினர் தங்களின் அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கை புதுடெல்லியில் நேற்று மாலை சந்தித்து அளித்தனர். அப்போது குழுவில் இடம்பெற்றிருந்த திருமாவளவன் பிரதமரைச் சந்திக்க வரவில்லை என்பது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திருமாவளவன் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்