நாத்திகம் இராமசாமி காலமானார்

வெள்ளி, 25 செப்டம்பர் 2009 (12:42 IST)
webdunia photo
WD
பெருந்தலைவர் காமராசரின் தலைமையில் இருந்த காங்கிரஸ் கட்சியின் தலை சிறந்த பேச்சாளராகவும், சீரிய பகுத்தறிவுவாதியாக திகழ்ந்தவரும், பத்திரிக்கையாளருமான நாத்திகம் இராமசாமி காலமானார்.

தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்று மிகச் சிறந்த பகுத்தறிவுப் பிரச்சாரகராக இருந்த நாத்திகம் இராமசாமி, பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பெருந்தலைவர் காமராசரின் சாதனைகளையும், பகுத்தறிவுக் கட்டுரைகளையும் தான் நடத்திவந்த நாத்திகம் இதழில் வெளியிட்டு வந்தார். 70களில் நாத்திகம் நாளேட்டிற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

தி.மு.க.விற்கு எதிரான மிகச் சிறந்த மேடைப் பேச்சாளராக நாத்திகம் இராமசாமி இருந்தார். கணீரென்ற குரலில் இவர் பேசுவதைக் கேட்க தமிழகத்தின் எந்த மூலையிலும் பெரும் கூட்டம் கூடும்.

கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் குன்றியிருந்த இராமசாமி, இராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று மாலை மருத்துவமனையில் உயிர் பிரிந்தது.

நாத்திகம் இராமசாமியின் உடல் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஆற்காடு சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்திய பொதுவுடமைக் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலர் விடுதலை இராசேந்திரன், பிரபல வழக்கறிஞர் துரைசாமி ஆகியோர் இன்று காலை நாத்திகம் இராமசாமிக்கு அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் உட்பட பல கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று மாலை அவரது உடல் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட மேல் ஆழ்வார் தோப்பிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நாளை அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்