இலங்கை‌த் தமிழர்களின் துன்பம் தீர தமிழக தலைவர்கள் ஒன்றுபட வேண்டும்: சுதர்சன நாச்சியப்பன்

திங்கள், 7 செப்டம்பர் 2009 (09:15 IST)
''இலங்கை‌த் தமிழர்களின் துன்பம் தீர, இனியாவது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் நிரந்தர தீர்வு காண வேண்டும்'' என்று காங்கிரஸ் நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.

WD
இது தொட‌‌ர்பாக அவ‌ர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், ''தமிழக அரசியல் தலைவர்கள் தங்களுக்குள் உள்ள அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து இலங்கை‌த் தமிழர்களின் துன்பம் தீர நிரந்தர தீர்வு காண வேண்டும். நாடு சுதந்திரம் அடைவதற்கும், சுதந்திரத்தை பேணி காப்பதிலும் தமிழர்களின் பங்கும், தொண்டும் கணிசமாக இருந்துள்ளது.

கடந்த 60 ஆண்டுகளாக மத்தியில் தமிழர்கள் முக்கிய பங்கு வகித்த ஆட்சிதான் இருந்து வந்திருக்கிறது. எந்த வகையிலும் தமிழர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு விரோதமாக செயல்பட வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு எப்போதுமே இல்லை. தமிழின விரோத போக்கை மத்திய அரசு கடைபிடிக்கிறது என்பது தேவையற்ற வாதம்.

இலங்கையில் தமிழர்கள் இழந்த மாநிலத்தை, குடியிருப்புகளை, விவசாய நிலங்களை, தொழிற்பேட்டைகளை, வழிபாட்டுத் தலங்களை மீண்டும் தமிழ் மக்களே பெறும் நிலையை கொண்டுவர வேண்டும்.

25 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றிருந்த நிலையை மீண்டும் பெற்றுத்தர வேண்டும். இதை செயல்படுத்த தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சியினரும், தமிழ் இயக்கங்களும் ஒன்று கூடி முடிவெடுத்து நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

குறுகிய கால அரசியல் லாபத்துக்கு இடமளிக்காமல் தமிழினத்தின் வாழ்வுரிமையை முன்னிறுத்த வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் உள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி ஆகியோர் இந்த கருத்தையே கொண்டுள்ளனர்.

நமக்கு நாமே வசைபாடுவதும், குறை கூறுவதும் துன்பப்பட்டுக் கிடக்கும் லட்சக்கணக்கான தமிழர்களை அலட்சியப்படுத்துவதாகும் எ‌ன்று சுதர்சன நாச்சியப்பன் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்