''திருமங்கலம் இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியைவிட மிகப் பெரிதான வெற்றியை ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பெறுவோம்'' என்றும் ''அ.தி.மு.க.வினரின் ஓட்டுகளையும் காங்கிரஸ் வேட்பாளருக்கு பெற்றுக் கொடுத்து வெற்றி பெற வேண்டும்'' என்றும் தி.மு.க தென்மண்டல அமைப்புச் செயலரும், மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி தெரிவித்தார்.
FILE
தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் நடைபெற்ற தி.மு.க கூட்டணிக் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் மு.க.அழகிரி பேசுகையில், மக்களவைத் தேர்தலில் தென் மண்டலத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் வெற்றிபெற சபதம் ஏற்றோம். 9 தொகுதிகளில் வென்று காட்டினோம்.
இம்முறை "எதிரியே' இல்லாத நிலையில் நாம் எவ்வளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும் என்பது முக்கியம். திருமங்கலம் இடைத்தேர்தலில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றோம். எனவே, ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டியை 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். இல்லையெனில் அது வெற்றியே அல்ல.
இடைத்தேர்தல் என்றாலே அ.தி.மு.க.வுக்கு பயம். அதுவும் என்னைக் கண்டு பயம் அதிகரித்துள்ளது. ஆனாலும், நமது கூட்டணி தொண்டர்கள் மந்தமாக இருந்து விடக் கூடாது. மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டாலே போதும்.
அ.தி.மு.க.வினரின் ஓட்டுகளையும் காங்கிரஸ் வேட்பாளருக்கு பெற்றுக் கொடுத்து வெற்றி பெற வேண்டும். இதுகுறித்த ரகசியத்தை நான் கடைசியில் சொல்லித் தருகிறேன். கட்சிக்காரர்கள் உங்களுக்குள் போட்டி போடாதீர்கள். மக்களின் ஓட்டுகளை பெற போட்டி போடுங்கள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலகிய அனிதா ராதாகிருஷ்ணன் வரும் 10ஆம் தேதி முறைப்படி தி.மு.க.வில் இணைகிறார் என்று அழகிரி கூறினார்.