இடைத்தேர்தல் மட்டுமே ஒரு கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வாய்ப்பாக கருதிவிட முடியாது என்று தெரிவித்துள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், 2011ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை இலக்காக கொண்டு முழுமூச்சோடு செயல்படுவோம் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெற இருக்கும் ஸ்ரீவைகுண்டம், இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர் சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி முடிவெடுத்துள்ளது.
மறுசீரமைப்பிற்கு முன் உள்ளடக்கிய பகுதிகளை கொண்ட இத்தொகுதிகள், 2011 பொதுத் தேர்தலின்போது பெரும் மாறுதல்களுக்கு உட்படும். அடுத்த பொதுத்தேர்தலுக்கு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு காலமே இருக்கின்ற நிலையில் இத்தொகுதிகளில் தற்சமயம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்களால் குறுகிய காலத்தில் மக்கள் நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
ஒரு அரசியல் இயக்கத்தின் ஜனநாயக கடமை, வெற்றி தோல்விகளை கருத்தில் கொள்ளாமல் தேர்தலில் போட்டியிடுவதுதான் என்றிருந்தாலும், இடைத்தேர்தல் மட்டுமே ஒரு கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வாய்ப்பாக கருதிவிட முடியாது.
எனவே, 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை இலக்காக கொண்டு, கட்சி வளர்ச்சி பணிகளில் முழுமையான கவனம் செலுத்தி முழுமூச்சோடு செயல்படுமாறு தொண்டர்களுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன் என்று சரத்குமார் கூறியுள்ளார்.