சென்னையில் தீ விபத்து: 2 ‌பேர் காயம்

செவ்வாய், 26 மே 2009 (10:57 IST)
சென்னையில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 300 குடிசைகள் எரிந்து சாம்பலாகின.

சென்னை ஷெனாய்நகரகூவம் ஆற்றாங்கரையோரம் நூற்றுக்கணக்கான குடிசைகள் உள்ளன. இன்று பிற்பகல் அங்குள்ள ஓர் குடிசையில் தீடீரென தீப்பிடித்தது. அந்த நேரத்தில் பலத்தக் காற்று வீசியதால் தீ மளமளவென மற்ற குடிசைகளுக்கும் பரவியது.
webdunia photoWD

இதில் குடிசைகளுக்குள் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அடுத்தடுத்தவெடித்துச் சிதறின. இதனால், ஆற்றாங்கரையை ஒட்டியுள்ள சூளைமேடு அப்பாராவ் தோட்டம் வரை, தீ பரவியது. சுமார் 300 குடிசைகள் எரிந்து சாம்பலாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த கோர தீவிபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் குடிசை முன் கட்டியிருந்த 2 மாடுகளும் கருகின.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

இந்த விபத்து குறித்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறுகையில், "முதலில் 5 குடிசைகள் எரிந்துகொண்டிருந்தன. அப்போது, ஓர் குடிசைக்குள் 3 வயது நிரம்பிய ஓர் பெண் குழந்தை தூங்கிக் கொண்டிருப்பதாக பக்கத்துக்கு வீட்டினர் கூறினர். கடைக்கு சென்றிருந்த அந்த குழந்தையின் தாயார், வீடு தீப்பற்றி எரிவதை கண்டு அலறியடித்து ஓடிவந்தார். தீயையும் பொருட்படுத்தாமல் அவர் குடிசைக்குள் பாய்ந்து தனது குழந்தையை காப்பாற்ற முயன்றார்.

ஆனால், அவரை தடுத்துவிட்டு, 5 பேர் கொண்ட நாங்கள் கும்பலாக உள்ளே நுழைந்து அந்த குழந்தையை காப்பாற்ற முயன்றோம். அப்போது, திடீரென அங்கிருந்த சமையல் எரிவாயு வெடித்துச் சிதறியதில் குடிசை முழுவதுமாக பற்றி எரிந்தது. இதனால் நாங்கள் வெளியே வந்துவிட்டோம். குழந்தை என்ன ஆனது என்று தெரியவில்லை" என்றார் அதிர்ச்சி மாறாமல்.

நாசவேலை காரணம்?

அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், இந்த பகுதியில் பல ஆண்டுகளாக நாங்கள் வசித்து வருகிறோம். இதில், நூற்றுக்கணக்கான வீடுகளுக்கு ரேஷன் கார்டுகள் கிடையாது. கடந்த வாரம் இங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், ரேஷன் கார்டுகள் இல்லாதோர் குடிசையை காலி பண்ண வேண்டும் என்று எச்சரித்தனர். 2 நாள் (இன்று வரை) கால அவகாசமும் கொடுத்திருந்தனர். இந்நிலையில், இன்று அந்த குடிசைகள் அனைத்தும் தீப்பிடித்துள்ளது. இதஏதோ நாசவேலையாக இருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்" என்றார்.

அந்த பகுதி முழுவதும் குறுகலான சந்துகளாக இருப்பதால், அங்கு தீயணைப்பு வாகனங்கள் உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் தீயை அணைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டதாகவும், இதே பகுதியில் கடந்த 7 ஆண்டுகளில் நடக்கும் 4வது கோர தீ விபத்து இது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.