தமிழகத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலர் ராகுல் காந்தி இன்று தமிழகத்துக்கு வருகிறார்.
தனி விமானத்தில் இன்று பகல் 2 மணிக்கு மதுரைக்கு வரும் ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் சிவகங்கைக்கு செல்கிறார். அங்கு சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்தை ஆதரித்து பேசுகிறார்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் மாலை 4.15 மணிக்கு வந்து இறங்குகிறார். அங்கிருந்து குண்டு துளைக்காத காரில் திருச்சி தென்னூர் உழவர்சந்தையில் நடைபெறும் பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார்.
பொதுக்கூட்டத்தில் திருச்சி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா தொண்டைமான், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் நடிகர் நெப்போலியன், கரூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி ஆகியோரை ஆதரித்து ராகுல்காந்தி பேசுகிறார்.
ராகுல் காந்தி வருகையொட்டி திருச்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து குண்டு துளைக்காத கார் கொண்டு வரப்பட்டுள்ளது.
உழவர் சந்தையில் ராகுல்காந்தி பேசுவதற்காக குண்டு துளைக்காத மேடையும் அமைக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 1500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.