இலங்கைக்கு இறுதிக்கெடு: பிரதமருக்கு கருணாநிதி மீண்டும் தந்தி
செவ்வாய், 21 ஏப்ரல் 2009 (15:54 IST)
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட அந்நாட்டு அரசுக்கு இந்திய அரசு இறுதி கெடு விதிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு முதலமைச்சர் கருணாநிதி மீண்டும் தந்தி அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பி உள்ள தந்தியில், இலங்கையில் போர் நிலைமை மிக கொடூரமாக உள்ளது. தமிழர்கள் மோசமான நிலையில் சிக்கி உள்ளனர். இது பெரும் கவலை அளிக்கிறது.
ஐக்கிய நாட்டு சபையும்,அனைத்து நாடுகளும், இலங்கை அரசை உடனே போரை நிறுத்தும் படி வற்புறுத்தி உள்ளனர். இலங்கையில் உடனடியாக போரை நிறுத்தும் படியும், நிரந்தர போர் நிறுத்தம் செய்யும் படியும் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோர் இலங்கை அரசுக்கு இறுதி கெடு விதிக்க வேண்டும். லட்சக்கணக்கான தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.