ஈழத்தமிழர் பிரச்சனையில் மவுனம் ஏன்?: அருந்ததி ராய் கேள்வி
செவ்வாய், 31 மார்ச் 2009 (12:27 IST)
ஈழத்தமிழர் பிரச்சனையில் ஊடகங்களும், இந்திய அரசும் மவுனமாக இருப்பதாக கவலைத் தெரிவித்துள்ள பிரபல பெண் எழுத்தாளரும், சமூக சேவகருமான அருந்ததி ராய், தமிழர்கள் அனைவரும் கொல்லப்படுவதற்கு முன்னரே உலக நாடுகள் இதில் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்துவதற்காக, 'இலங்கையில் போரை நிறுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட அணிதிரட்டும் குழு' என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் நேற்று நடந்த கண்டனக் கூட்டத்தில் பிரபல பெண் எழுத்தாளரும்,. சமூக நல போராளியுமான அருந்ததி ராய் கலந்துக் கொள்வதாக இருந்தது. ஆனால், அவரது குடும்பத்தில் ஏற்பட்ட ஓர் துயரச் சம்பவம் காரணமாக அவர் கூட்டத்தில் கலந்துகொள்ள இயலவில்லை என்று கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
எனினும், இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக, அருந்ததி ராய் அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கையில் இன்று பெருகிவரும் பயங்கரத்தை அதை சுற்றியுள்ள மவுனமே சாத்தியப்படுத்துகிறது. மைய நீரோட்ட ஊடகங்கள் பெரும்பாலும், இதுகுறித்த செய்திகளை பிரசுரிப்பதில்லை. உண்மையில் அங்கே என்ன நடக்கிறது என்பது பற்றி சர்வதேச ஊடகங்களிலும் செய்திகள் வருவதில்லை. ஏன் இப்படி நடக்கிறது என்பது மிகவும் கவலைக்குரிய ஒன்றாக உள்ளது.
இலங்கையில் எஞ்சியுள்ள கொஞ்ச நஞ்ச ஜனநாயகத்தையும் அழித்து தமிழ் மக்களின் மீது சொல்லாணா குற்றங்களை புரிவதற்கு, 'பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம்' என்ற பிரச்சாரத்தை இலங்கை அரசு பயன்படுத்திக் கொள்கிறது.
இலங்கை அரசு, குடிமக்கள் வசிக்கும் பகுதிகள், மருத்துவமனைகள், பாதுகாப்பு வதிவிடங்கள் ஆகிய எல்லாவற்றின் மீதும் குண்டுகளை பொழிந்து அவற்றையும் போர்க்களமாக மாற்றியுள்ளது. நம்பத்தகுந்த மதிப்பீடுகளின்படி, இன்று போர்க்களத்தில் சிக்கியுள்ள அப்பாவி மக்களின் எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. டாங்கிகள், போர் விமானங்கள் சகிதம் இன்று இலங்கை ராணுவம் முன்னேறி கொண்டுள்ளது.
இதற்கிடையே, இடம் பெயர்க்கப்பட்ட தமிழர்களை பாதுகாப்பாக குடியமர்த்துவதற்காக வவுனியா மற்றும் மன்னார் பகுதிகளில் பல பொதுநல கிராமங்களை நிறுவியிருப்பதாக அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், போரிலிருந்து தப்பி ஓடிவரும் பொதுமக்களை கட்டாயமாக பிடித்துவைக்கும் மையங்களாக இந்த கிராமங்கள் செயல்படும் என 'டெய்லி கிராப்' நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. கடந்த 1930களில் நாஜிக்கள் செய்ததுபோல இதுவும் கூட வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம்.
விடுதலைப் புலிகளை துடைத்தெறிவது என்ற குறிக்கோளின் அடிப்படையில் இவ்வாறு பொதுமக்களையும், பயங்கரவாதிகளையும் ஒன்றாக்கும் இந்த சதியின் மூலம், இறுதியில் இனப்படுகொலையாக முடியக்கூடிய ஒரு செயலை செய்து முடிக்கும் எல்லைக்கே இலங்கை அரசு சென்றுவிட்டதாக தெரிகிறது.
இன்றைய இலங்கையில் சுதந்திரமான ஊடகம் என ஒன்று இல்லை என மங்கள சமரவீர கூறியுள்ளார். சமூகத்தை அச்சத்தில் உறையவைத்துள்ள கொலைப்படைகள் குறித்தும் 'வெள்ளை வேன் கடத்தல்கள்' குறித்தும் கூட சமரவீர கூறியுள்ளார். பத்திரியாளர்கள் உள்பட எதிர்ப்பு தெரிவித்த பலர் கடத்திக் கொல்லப்பட்டுள்ளனர். இதை பன்னாட்டு பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பும் கண்டித்துள்ளது.
இலங்கை அரசுக்கு பல்வேறு உதவிகளை இந்திய அரசு செய்துவருவதாக தகவல்கள் கூறுகின்றன. இது ரொம்பவும் மூர்க்கத்தனமாக கொடுமை.
இலங்கை பிரச்சனை காரணமாக, தமிழகத்தில் 10க்கும் அதிகமானோர் தீக்குளித்து தங்களது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்த கோபமும் துயரும், இன்று ஓர் தேர்தல் பிரச்சனையாக ஆக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த கவலை இந்தியாவின் பிற பகுதிகளை சென்றடையாதது வியப்பூட்டுகிறது. ஏன் இந்த மவுனம்? இலங்கையில் நடைபெறும் வன்முறைகளின் அளவை வைத்து பார்க்கும்போது இந்த மவுனம் மன்னிக்கக்கூடியது அல்ல.
முதலில் ஒரு தரப்பை ஆதரிப்பது, பின்னர் மற்றொரு தரப்பை ஆதரிப்பது என்கிற வகையில், இந்த பிரச்சனையில் மத்திய அரசு கடைப்பிடிக்கும் பொறுப்பற்ற தலையீடுகளின் நீண்ட வரலாறு இதில் பெரும்பங்கு வகிக்கிறது. முன்னதாகவே பேசி இருக்க வேண்டிய நான் உள்பட எங்களில் பலர் அப்படி செய்யாமல் போனதற்கு காரணம், இந்த போர் குறித்த முழுத் தகவல்களும் எங்களுக்கு கிடைக்காமல் போனதே.
இலங்கையில் படுகொலைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பசியை எதிர்கொண்டுள்ள நிலையில் ஒரு அழிப்பு நடைபெறுவதற்கு காத்திருக்கும் நிலையில், இந்த நாட்டில் ஒரு மரண அமைதி நிலவுகிறது. இது ஓர் மாபெரும் மனித சோகம். எல்லாம் முடிந்து போவதற்கு முன்னதாகவே உலகம் இதில் தலையிட வேண்டும். இவ்வாறு தனது அறிக்கையில் அருந்ததி ராய் கூறியுள்ளார்.