ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளவாடி வனப்பகுதியில் விவசாய பயிர்களை காட்டுயானைகள் அழிக்கும் சம்பவம் தொடர்கிறது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தது தாளவாடி மலைகிராம பகுதி. இது அடர்ந்த வனப்பகுதிக்கு இடையே உள்ளது. இந்த கிராமங்களில் விவாயிகள் தற்போது கரும்பு பயரிட்டுள்ளனர். தாளவாடி வனப்பகுதியில் தொடர்ந்து கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வனப்பகுதிக்குள் இருந்த காட்டுயானைகள் உணவைதேடி பல்வேறு பகுதிகளுக்கு படையெடுத்து வருகிறது. இந்த காட்டுயானைகள் தாளவாடி பகுதியை சேர்ந்த மல்லன்குழி, எக்கத்தூர், ஜீரஹள்ளி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள விவசாய காட்டிற்குள் புகுந்து கரும்பு பயிர்களை அழித்து வருகிறது.
வயலுக்குள் நுழையும் காட்டு யானைகள், தீ பந்தங்களை கொளுத்தினாலும், பட்டாசு வெடித்தாலும் விரட்ட முடிவதில்லை என்கின்றனர் விவசாயிகள். ஆகவே வனத்துறையினர் காட்டுயானைகளிடம் இருந்து கரும்பு பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.