இலங்கைத் தமிழர் படுகொலைக்கு கருணாநிதியே பொறுப்பு : வைகோ குற்றச்சாற்று

திங்கள், 9 மார்ச் 2009 (19:29 IST)
இலங்கைத் தமிழர்கள் படுகொலைக்கு இந்திய அரசே காரணம்; அதன் கூட்டணி கட்சிகளே காரணம்; தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் முதல்வர் கருணாநிதியே காரணம் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இனியும் அறிக்கைவிட்டும், பேசியும் தமிழக மக்களை கருணாநிதி ஏமாற்ற முடியாது என்று ஆவேசத்துடன் கூறினார்.

PTI PhotoPTI
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. சென்னை சேப்பாக்கத்தில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் மேற்கொண்டார். இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரதம் மாலை 5 மணிக்கு முடிவுக்கு வந்தது.

பிற்பகல் 3.30 மணியளவில் உண்ணாவிரத மேடைக்கு வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இலங்கை தமிழருக்கு உதவுவதற்காக உண்ணாவிரத மேடையில் வைக்கப்பட்டிருந்த உண்டியலில் ரூ.5 லட்சம் செலுத்தினார். பின்னர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

இலங்கைத் தமிழருக்காக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உண்ணாவிரதம் மேற்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இரண்டு முறை மழைத்துளிகள் விழ ஆரம்பித்தன. மேகக் கூட்டங்கள் திரண்டு, சூரியக்கதிர்களை மறைத்திருப்பது, வரும் மக்களவைத் தேர்தலில் கருணாநிதியின் சின்னம் காணாமல் போகும் என்பதையே காட்டுகிறது.

இலங்கையில் செத்து மடியும் ஈழ்த்தமிழருக்காக வானத்தில் இருந்து சிந்தும் கண்ணீர் துளிகள் தான் இந்த மழை.

இலங்கைத் தமிழர் படுகொலைக்கு இந்திய அரசு காரணம்; அதன் கூட்டணிக் கட்சிகள் காரணம்; தமிழத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக காரணம். இந்த படுகொலைகளுக்கு முதல்வர் கருணாநிதியே பொறுப்பாளி.

இந்த குற்றச்சாட்டை இப்போது நாங்கள் கூறவில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதியே, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார். ஆனால், அதற்கு இதுவரை கருணாநிதியிடம் இருந்து பதில் இல்லை. இந்த படுகொலைக்கு கருணாநிதியே பொறுப்பேற்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் படுகொலை தொடர்பாக, கருணாநிதி ஓர் ராஜினாமா நாடகம் நடத்தினார். தமிழக சட்டசபையிலே தீர்மானம் கொண்டுவந்தார். பின்னர், தனது கட்சியின் எம்பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்வார்கள் என்றார். தனது மகள் கனிமொழியிடம் இருந்து ராஜினாமா கடிதம் வாங்கினார்.

இந்த ராஜினாமா கடிதத்தை யாரிடம் சமர்பிக்க வேண்டும்? மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதாக இருந்தால் ராஜினாமா கடிதத்தை மக்களவை சபாநாயகரிடம் கொடுக்க வேண்டும். மாநிலங்களவை தலைவரிடம் கொடுக்க வேண்டும். அந்த பதவிக்கு கருணாநிதி எப்போது வந்தார்? இது ஓர் பச்சை அயோக்கியத்தனம்; பித்தலாட்டம்.

தந்க்களது கோரிக்கையை ஏற்று, இலங்கை அரசு 2 நாள் நேரம் போர் நிறுத்தம் செய்ததாக கருணாநிதி கூறினார். ஆனால், இலங்கை அரசோ, நாங்கள் போர் நிறுத்தம் செய்யவில்லை; தமிழர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக கெடு விதித்ததாக கூறியது. ஆனால், இதை யாரும் மறுக்கவில்லை.

இலங்கை பிரச்சனை தொடர்பாக, வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது, இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்வதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. அப்போது ஓர் செய்தியாளர், "இலங்கை அரசு பணம் கொடுத்து கேட்டால், ஆயுதம் விற்பீர்களா?" என்று கேட்டார். அதற்கு உடனடியாக பதிலளித்த வாஜ்பாய், பணம் கொடுத்தாலும் இலங்கைக்கு ஆயுதங்களை விற்க மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறினார்.

ஆனால், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு இலங்கைக்கு ராணுவப் பயிற்சி அளிக்கிறது. ஆயுத உதவி செய்கிறது.

இலங்கையில் போரை நிறுத்தும்படி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சொல்கிறார்; பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்துகிறார். ஆனால் இங்குள்ள இந்திய அரசு அப்படி எதுவும் வலியுறுத்தவில்லை. ஏனெனில், இந்த போரை நடத்துவதே இந்திய அரசுதான்.

இரண்டாம் உலகப் போர் நடைபெற்றபோது கூட, மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. ஆனால், தற்போதைய இலங்கை அரசு, புது குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மருத்துவமனைகள் மீது குண்டுகளை வீசி நம் தமிழ் மக்களை கூண்டோடு அழித்து வருகிறது. நெருப்பு மண்டலக் குண்டுகளை (கிளஸ்டர் குண்டுகள்) வீசி கொத்து கொத்தாக மக்களை அழித்து வருகிறது.

ஆனால், அங்குள்ள தமிழர்கள் பாதுகாப்பாக வெளியேறிவிட்டதாக இலங்கை அரசு சொல்கிறது. அதை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சொல்கிறார். அவர் சொல்வதை கருணாநிதி நம்மிடம் சொல்கிறார். ஏனெனில் இது ஓர் கூட்டுச்சதி.

இதன் விளைவுதான், இதனால் ஏற்பட்ட மனக்குமுறல்கள் தான் முத்துக்குமார் தீக்குளித்தது. இலங்கைத் தமிழர்களை காப்பாற்றக்கோரி தமிழகத்தில் இதுவரை 9 பேர் தீக்குளித்து உயிரை மாய்த்துள்ளனர். ஆனால், அவர்கள் குடும்பப் பிரச்சனையால் தீக்குளித்து உயிர்விட்டதாக, முதல்வர் கருணாநிதி அந்த தியாகத்தை கொச்சைப்படுத்தி வருகிறார்.

இதுவரை இலங்கையில் தமிழ் மக்கள் சிந்திய ஒவ்வொரு சொட்டு இரத்தத்துக்கும் முதல்வர் கருணாநிதியே பொறுப்பேற்க வேண்டும். அறிக்கைகள் எழுதியும், பேசியும் இனியும் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.

இந்தியா போர் நிறுத்தத்தை வலியுறுத்தினால், சர்வதேச நாடுகள் அனைத்தும் போர் நிறுத்தம் செய்யும்படி இலங்கை அரசை வலியுறுத்தும். ஆனால் இந்தியாவே போர் நிறுத்தத்தை வலியுறுத்தாத போது, மற்ற நாடுகள் எப்படி வலியுறுத்தும்? .

இலங்கை தமிழர் பிரச்சனை காரணமாக, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என்றார். ஆனால், முத்துக்குமார் இறந்தபோது, அதே நாளில் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி பிறந்தநாள் கொண்டாடுகிறார்.

தனது வரலாறை 'நெஞ்சுக்கு நீதி'யாக எழுதியுள்ளார் கருணாநிதி. ஆனால் அவருக்கு இதயமே கிடையாது. அப்படி இருக்கும்போது எங்கே இருக்கிறது நீதி? கருணாநிதியை பற்றி இன்னொரு வரலாறு எழுதப்படும். அதில், தமிழின துரோகி என அவர் பெயர் பதிவு செய்யப்படும்.

இலங்கைத் தமிழர்களை காக்க எந்த நாதியும் இல்லையே என்று யாரும் கலங்க வேண்டாம்; நாங்கள் இருக்கிறோம். தமிழ் குலத்தை காப்போம்; எதிரிகளை வேரறுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.