இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பா.ம.க. மகளிர் சங்கம் நாளை உண்ணாவிரதம்

திங்கள், 9 மார்ச் 2009 (11:06 IST)
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பா.ம.க. மகளிர் சங்கம் சார்பில் நாளை (10ஆ‌ம் தே‌தி) உண்ணாவிரதம் நடைபெறுகிறது எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌த் தலைவர் கோ.க.மணி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில், இலங்கையில் சிங்கள ராஜபக்சே அரசு தமிழர்களை முப்படைகளை கொண்டும், கொத்துக் குண்டுகளைக் கொண்டும் அழித்து வருகின்றது. இலங்கை அரசு பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளிலும் இலங்கை ராணுவம் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டு அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்து வருகிறது.

ராஜபக்சேவின் இந்த கொடூரமான செயலை கண்டித்தும், உடனடியாக போர்நிறுத்தம் செய்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி பாட்டாளி மகளிர் சங்கத்தின் சார்பில் நாளை (10ஆ‌ம் தே‌தி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

மகளிர் சங்க தலைவி நிர்மலா ராசா தலைமை தாங்குகிறார். ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் சக்தி கமலாம்பாள், காசாம்பு பூமாலை, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சிலம்புச் செல்வி உள்பட பலர் முன்னிலை வகிக்கிறார்கள்.

உண்ணாவிரதத்தை நா‌‌ன் (கோ.க.ம‌ணி) தொடங்கி வைக்கிறே‌‌ன். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இலங்கை பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். உண்ணாவிரதத்தில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பாட்டாளி மகளிர் சங்கத்தினர், பெண்கள் அமைப்பினர் கலந்துகொள்கிறார்கள் எ‌ன்று கோ.க.ம‌ணி கூ‌றியு‌ள்ளா‌ர்.