ஈழத் தமிழர்களை காப்பாற்றும் பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது: ராமதாஸ்
புதன், 4 மார்ச் 2009 (19:51 IST)
''ஈழத் தமிழர்களை காப்பாற்றும் பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது'' என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை அரசு போரின் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தை குறுகிய நிலப்பரப்பிற்குள் நிறுத்தியுள்ளது. அதில் 3 லட்சம் தமிழர்கள் பட்டினியாலும், நோயினாலும் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். இன்னொரு பக்கம் ராஜபக்சேயின் இலங்கை அரசு இன அழிப்பு போரை நடத்திக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவதிப்படும் ஈழத்தமிழர்களை காப்பாற்றும் பொறுப்பு இந்தியாவிற்கு உள்ளது.
இலங்கை இன அழிப்பு போரில் ஈடுபட்டு வருவதை உலக நாடுகள் உணர்ந்தும், ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால் இந்தியா மட்டும் தயக்கம் காட்டி வருகிறது. இப்பொழுதுதான் போரை நிறுத்த வேண்டும் என்று பேச துவங்கியுள்ளது. இது வரவேற்கத்தக்க மாற்றம்தான். இந்த மாற்றம் பேச்சளவில் மட்டுமல்லாது செயலளவிலும் இருக்க வேண்டும். இந்தியா ஈழத் தமிழர்களுக்கு உணவு, மருந்துகளை விமானம் மூலம் முல்லைத்தீவு மக்களுக்கு தினமும் வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.
இலங்கை அமைதிக்காக இங்கிலாந்து பிரதமர் நியமித்த விசேஷ தூதரை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும். அதேபோல் ஐ.நா சபையில் இலங்கை பிரச்சனையை எழுப்பி சர்வதேச அளவில் மட்டுமல்லாது சர்வதேச விளையாட்டிலிருந்தும் விலக்கி வைக்க வேண்டும். அதன் மூலம் இலங்கை அரசை பணிய வைக்க முடியும். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் பா.ம.க பொதுக்குழு கூடி கூட்டணி குறித்து முடிவு செய்யும். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களை தாக்கிய காவல்துறையினரை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறினார்.