சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கோழி வியாபாரி ஒருவர் திடீரென்று நேற்றிரவு தீக்குளித்து இறந்தார். இலங்கை பிரச்சனை காரணமாக அவர் உயிரை விட்டாரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுங்க சாவடி பேருந்து நிலையம் எதிரே நேற்று மாலை 6 மணி அளவில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தபடி முதியவர் ஒருவர் ஓடி வந்தார். வலி தாங்காமல் கூச்சல் போட்டபடியே கீழே விழுந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக தீக்குளித்ததாக தகவல் பரவியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், இறந்தவர் பெயர் அமரேசன் (65) என்று தெரியவந்தது. வண்ணாரப்பேட்டையில் கோழிக்கறி கடை நடத்தி வந்துள்ளார். இவரது வீடு வண்ணாரப்பேட்டை நமச்சிவாயம் தெருவில் உள்ளது. இவருக்கு வசந்தா என்ற மனைவியும், வெங்கடேசன், சங்கர் என்ற 2 மகன்களும், மீரா, அருள்ஜோதி என்ற 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
அமரேசன் இறந்தது தொடர்பாக அவரது மகன் சங்கர் கூறுகையில், ஆஸ்மா நோயால் அவதிப்பட்ட வந்த எனது தந்தை, அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இலங்கைத் தமிழர்கள் சாவதை பத்திரிகை செய்திகளைப் பார்த்து அனுதாபப்படுவார்.
இரவு ஏழரை மணிக்கு அவர் தீக்குளித்து இறந்துவிட்டதாக எங்களுக்கு தகவல் வந்தது. அவர் எதற்காக தீக்குளித்தார் என்று தெரியவில்லை. ஆனால், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் எனது தந்தை இலங்கை பிரச்சனைக்காகவே தீக்குளித்து இறந்ததாக சொல்கிறார்கள் என்றார்.
இதற்கிடையே, இந்த சம்பவத்தில் காவல்துறையினர் உண்மை தகவலை மறைப்பதாகக் கூறி, புதுவண்ணாரப்பேட்டையில் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தினர்.
இரவு ஒன்பதரை மணிக்கு பகுஜன் சமாஜ் கட்சியினரும், ம.தி.மு.க. கட்சியினரும் ஏராளமான பேர் ஸ்டான்லி அரசு மருத்துவமனை முன்பு கூடி மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் கூறுகையில், ''முதியவர் தீக்குளித்த போது, கோஷம் எதுவும் போடவில்லை. இலங்கை பிரச்சனை தொடர்பாக துண்டு நோட்டீசுகள் எதுவும் அந்த இடத்தில் சிக்கவில்லை. இறந்து போனவர் எதற்காக தீக்குளித்தார் என்பது பற்றி வாக்குமூலம் எதுவும் கொடுக்கவில்லை. இதுபற்றி தொடர்ந்து விசாரித்து வருகிறோம்'' என்றனர்.
இந்த நிலையில், காவல்துறை துணை ஆணையர் பன்னீர்செல்வம், உதவி ஆணையர்கள் ராஜாராம், முரளி ஆகியோர் அமரேசனின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.