ஈழத் தமிழர்கள் மீது சிறிலங்க இராணுவம் நடத்திவரும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் இன்று மாபெரும் கருப்புக் கொடி பேரணி நடைபெற்றது.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்தப் பேரணியில் பல ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மன்றோ சிலைக்கு அருகில் இருந்து கருப்புக் கொடி பேரணி புறப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலர் தொல். திருமாவளவன், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், இயக்கத்தின் அமைப்பாளர் பழ. நெடுமாறன், இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ் மாநில செயலர் தா.பாண்டியன், துணை செயலர் மகேந்திரன், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான வைத்தியலிங்கம் ஆகியோர் பேரணிக்கு தலைமை வகித்தனர். போரை நிறுத்து போரை நிறுத்து சிறலங்க அரசே போரை நிறுத்து; இன அழிப்பிற்கு இந்திய அரசே துணை போகாதே என்பது உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.