தா.பா‌ண்டிய‌ன் கா‌ரை எ‌ரி‌த்தவ‌ர்க‌ள் த‌ண்டி‌க்க‌ப்பட வே‌ண்டு‌ம்: கி.‌வீரம‌ணி

சனி, 7 பிப்ரவரி 2009 (17:25 IST)
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா.பாண்டிய‌னி‌ன் கார் கொளுத்தப்பட்டது என்ற செய்தி மிகவும் கண்டிக்கத்தக்கது எ‌‌ன்று கூ‌றியு‌ள்ள திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இதற்கு காரணமானவர்கள் யாரானாலும், காவல்துறை உடனடியாகக் கண்டறிந்து அவர்களுக்குரிய தண்டனை தரப்பட வேண்டும் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் தா.பாண்டியன் வீட்டில் அவரது கார் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது என்ற செய்தி மிகவும் கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமானவர்கள் யாரானாலும், அரசும், காவல்துறையும் உடனடியாகக் கண்டறிந்து அவர்களுக்குரிய தண்டனை தரப்பட வேண்டும்.

அரசியல் கட்சித் தலைவர்கள் எடுக்கும் நிலைக்கும் இத்தகைய சம்பவங்களுக்கும் காரணமோ, ஒருவேளை தொடர்போ இருந்தால் அது வெட்கப்பட வேண்டிய வேதனைக்குரியதாகும்.

தமிழ்நாட்டின் பண்பாடு காக்கப்பட வேண்டும், பொதுவாழ்வில் கருத்துப்போர் நடைபெறலாமே தவிர, வன்முறை எந்த ரூபத்திலும் தலைதூக்க விடக்கூடாது. திராவிடர் கழக சார்பில் இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இதேபோ‌ல் இந்தியன் ூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு பிரிவு தலைவர் தாவூத் மியாகான் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அமைதியை நிலைநாட்ட மிகத்தீவிரமாக முயற்சி செய்யும் நிலையில் தா.பாண்டியன் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது கார் எரிக்கப்பட்ட சம்பவம் மிகவும் கண்டனத்திற்குரியதாகும். இதன் பின்னணியில் இருப்பவர்கள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.