ஆண்வாரிசு இருந்தாலும் ஓய்வூதியம் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு தமிழக அரசு விளக்கம்
சனி, 7 பிப்ரவரி 2009 (16:16 IST)
ஆண் வாரிசு இருந்தாலும் முதியோர், விதவைகளுக்கு பென்சன் வழங்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ள நிலையில், இதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்துவது அரசியலே அன்றி வேறல்ல என்பது இதன்மூலம் தெளிவாக்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்றைய தீக்கதிர் நாளேட்டில் முதல் பக்கத்திலேயே புகைப்படத்துடன் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் புகைப்படத்தில் தாய்மார்கள் ஒப்பாரி வைத்து அழுவதைப் போலவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்றத்தலைவர் திண்டுக்கல் பாலபாரதி தலைமையேற்று அந்தப் போராட்டத்தை நடத்துவதைப் போலவும் உள்ளது. அந்தப் புகைப்படத்திற்கு கீழே, ஆண் வாரிசு இருந்தாலும் முதியோர், விதவைகளுக்கு பென்சன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மதுரையில் நடைபெற்ற ஒப்பாரி போராட்டம் என்று எழுதப்பட்டுள்ளது.
இதுபற்றி விளக்கத்தை அளிக்க வேண்டுமென்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். 1998ஆம் ஆண்டு தி.மு.க தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருந்த போது சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் 2.6.1998 அன்று வெளியிட்ட அரசாணை எண்.92-ன் படி விதவை பெண், கணவனால் கைவிடப்பட்ட மனைவி ஆகியோருக்கு 18 வயதிற்கு மேற்பட்ட ஆண் வாரிசு இருந்தால் முதியோர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை கிடைக்காது என்று உள்ள விதிமுறை நீக்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் திருமணமாகி விதவையாகியுள்ள மறுமணம் செய்யாமல் இருக்கும் ஆதரவற்ற பெண்களுக்கும்,
30 வயது நிரம்பிய, கணவருடன் ஐந்தாண்டுகளுக்கு குறையாமல் எவ்வித தொடர்பும் இல்லாமலும் அல்லது நீதிமன்றத்திலிருந்து விவாகரத்து சான்றிதழ் பெற்றவருமாகிய கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கும் 18 வயது நிரம்பிய வாரிசு இருந்தாலும், அவர்களுக்கும் முதியோர் திட்டத்தின் கீழ் பெறும் உதவித்தொகை வழங்கலாம் என்று அரசு ஆணையிடுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
அது மாத்திரமல்ல, முதியோருக்கு ஓய்வூதியம் அளிப்பது பற்றி தி.மு.கழக ஆட்சியில் 4.6.2008 அன்று சமூகநலத்துறை செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு வெளியிட்ட விளக்க அறிக்கையில், தகுதியுடைய மனுதாரருக்கு ஆண் வாரிசு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அது ஒரு தடையல்ல. மனுதாரர் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதும், வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவராகவும் நிர்ணயம் செய்யப்பட்டால், அவருக்கு ஆண் வாரிசு இருந்தாலும் ஓய்வூதியம் அளிக்கலாம் என்ற தெளிவுரை அனைத்து மாவட்ட ஆட்சியருக்கும் அளிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு ஆணைகளும் அரசினால் முறையாக நடைமுறைப்பட்டு வருகின்ற நிலையில் ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பின் ஆண் வாரிசு இருந்தாலும் முதியோர் மற்றும் விதவைகளுக்கு பென்சன் வழங்க வேண்டுமெனக் கோரி ஒப்பாரி போராட்டம் நடத்துவதும், அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றத் தலைவியே சென்று தலைமை தாங்குவதும் அரசியலே அன்றி வேறல்ல என்பது இதன்மூலம் தெளிவாக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.