சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள எழுமாபட்டியில் நேற்றிரவு பிரபல ரவுடியை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.
காரைக்குடி அடுத்த கல்லல் அருகே உள்ள அரண்மனை சிறுவயல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (45). இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
சமீபத்தில் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஒருவரை காரோடு எரித்துக்கொல்ல முயன்ற வழக்கில் அவரை கல்லல் காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் அரண்மனை சிறுவயலில் ரவுடி சண்முகம் தகராறு செய்து கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் சண்முகம் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார்.
இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை விரட்டிச் சென்றனர். எழுமாபட்டி என்ற இடத்தில் ரவுடி சண்முகத்தை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். அப்போது ரவுடி சண்முகம், காவல்துறை ஆய்வாளர், காவலர்களை அரிவாளால் வெட்ட முயன்றார். இதில் காவலர் சோமசுந்தரம், ஆய்வாளர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதைத் தொடர்ந்து காவல்துறை ஆய்வாளர், ரவுடி சண்முகத்தை சுட்டுக் கொன்றார். இதில் குண்டு பாய்ந்து சண்முகம் அந்த இடத்திலேயே இறந்தார்.