513 உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று மனுதாக்கல்

சனி, 7 பிப்ரவரி 2009 (10:19 IST)
தமிழகத்தில் காலியாக உள்ள 513 உள்ளாட்சி பதவிகளுக்கு வரு‌ம் 27‌ஆ‌ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத‌ற்கான வே‌ட்பு மனு‌த்தா‌க்க‌ல் இன்று காலை தொடங்கியது.

செ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் தா.சந்திரசேகரன், தமிழக‌த்த‌ி‌ல் மொத்தம் காலியாக உள்ள 513 இடங்களுக்கு வரு‌ம் 27ஆ‌ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. வேட்புமனுக்கள் இன்று (7ஆ‌ம் தே‌தி) முதல் பெறப்படுகிறது. மனுக்கள் பெற கடைசி நாள் ‌‌பி‌ப்ரவ‌ரி 14ஆ‌ம் தேதி. 16ஆ‌ம் தேதி மனுக்கள் பரிசீலனை, 18ஆ‌ம் தேதி மனுக்கள் வாபஸ், 27ஆ‌ம் தேதி தேர்தல், அடுத்த மாதம் 2ஆ‌ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

இந்த தேர்தலுக்காக 942 வாக்குசாவடிகள் அமைக்கப்படுகின்றன. நகர்ப்புறத்தில் மட்டும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், கிராமப் பகுதிகளில் வாக்கு சீட்டு முறையும் பயன்படுத்தப்படுகிறது.

2006ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி பொதுத் தேர்தல்களில் தேர்தல் செலவு கணக்கு சமர்ப்பிக்காத 3,618 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த உள்ளாட்சி பொதுத் தேர்தலின் போது ஊரகப் பகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்த ஒரு லட்சம் எந்திரங்கள் தேவைப்படுகிறது. இதற்காக ரூ.196 கோடி கேட்டு தமிழக அரசுக்கு பரிந்துரை அனுப்பியிருக்கிறோம். அப்படி அனுமதிக்கப்பட்டால் இந்தியாவிலேயே ஊரகப்பகுதி முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்திய முதல் மாநிலம் தமிழகமாக இருக்கும்.

மாநில தேர்தல் ஆணையத்துக்கு ரூ.2 கோடியே 13 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கோயம்பேட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் இதன் திறப்பு விழா நடைபெறும் எ‌‌ன்று ச‌ந்‌திரசேகர‌ன் கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்