இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சிங்கள அரசை கண்டித்தும், உடனடியாக அங்கு போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும் மதுரையில் இன்று மனித சங்கிலியில் ஈடுபட முயன்ற 175 வழக்கறிஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை உயர் நீதிமன்ற கிளை முன்பு வழக்கறிஞர்கள் இன்று காலையில் கூடினர். பின்னர் மனித சங்கிலியில் அவர்கள் ஈடுபட முயன்றனர். இதற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து மனித சங்கிலியில் ஈடுபட முயன்ற உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர்கள் 75 பேரும், மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் 100 பேரும் கைது செய்யப்பட்டனர்.
வழக்கறிஞர்களின் போராட்டத்தினால் நீதிமன்றப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.