சிதம்பரம் நடராஜ‌ர் கோ‌யில் நிர்வாகத்தை அரசு ஏற்பது பரிகாரம் ஆகாது: இல.கணேசன்

வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (11:29 IST)
சிதம்பரம் நடராஜ‌ர் கோ‌யில் நிர்வாகத்தை அரசு ஏற்பது பரிகாரம் ஆகாது எ‌ன்று பா.ஜ.க. மாநில தலைவர் இல.கணேசன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிதம்பரம் நடராஜ பெருமாள் ஆலயத்தின் நிர்வாகத்தை அரசு மேற்கொள்ள நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. சிதம்பரம் ஆலயத்தை அரசு மேற்கொள்வதற்கு ஒரு காரணமாக ஆலயத்தில் முறைகேடுகள் நடப்பதாக சொல்லப்பட்டுள்ளது. ஒருக்கால் முறைகேடுகள் நடப்பது நிரூபிக்கப்பட்டதாகவே ஒருவாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் கூட அதற்கு ஆலய நிர்வாகத்தை அரசு ஏற்பது என்பது பரிகாரம் ஆகாது.

ஆலயத்தின் வழிபாட்டில் குறுக்கிடப் போவதில்லை என்றும் நிர்வாகத்தை மாத்திரமே மேற்கொள்ளப் போவதாகவும் அரசு தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறை வேறாக உள்ளது. எந்த தேதியில் தேரோட்டம் நடத்த வேண்டும். கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது தொடங்கி என்ன பிரசாதம் தயாரிக்க வேண்டும் என்பது வரையில் அரசு அதிகாரிகளது குறுக்கீடு இருக்கிறது.

சிதம்பரத்தில் இது ஏற்கனவே தொடங்கி விட்டது. அரசு நிர்வாகத்தில் உள்ள ஆலயங்களில் வரும் வருமானத்தில் 85 சதவீதம் அரசு அதிகாரிகளை பராமரிக்கவே செலவாகிறது. வெறும் 15 சதவீதம் மாத்திரமே நேரடியாக ஆலயத்தோடு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு செலவாகிறது.

எனவே இந்த தீர்ப்பு ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல என கருதி இதுவரை ஆலயத்தை நிர்வகித்தவர்கள் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பது ஒரு ஆறுதலான விஷயம். சிதம்பரம் ஆலய நிர்வாகத்தை அரசு ஏற்றுக் கொள்ள வற்புறுத்திய சிவனடியாரும், மற்றவர்களும் தீர்ப்பின் வெற்றியை கொண்டாட ஈ.வெ.ரா. சிலைக்கு மாலை அணிவித்ததில் இருந்தே அவர்களது உள்நோக்கம் தெளிவாகிறது எ‌ன்று இல.கணேச‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.