இலங்கை பிரச்சனைக்காக தமிழ்நாடு முழுவதும் நாளை கறுப்புக்கொடி ஊர்வலம் நடைபெறும் என்றும் ஊர்வலத்தின் போது யாரும் கட்சிக் கொடியை கொண்டு வரக் கூடாது என்றும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனைக்கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுசெயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, பா.ஜ.க மாநில பொதுசெயலர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கை தமிழர் பிரச்சினையில் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய போராட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நாளை (7ஆம் தேதி) தமிழ்நாடு முழுவதிலும் அனைத்து ஊர்களிலும் கறுப்புக்கொடி ஊர்வலங்கள் நடத்த உள்ளோம். இந்த ஊர்வலம் அமைதியாகவும், கட்டுப்பாடாகவும் நடத்தப்படும். ஊர்வலத்தின் போது கட்சிக் கொடிகளை யாரும் கொண்டு வர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்.
10ஆம் தேதி மிகப்பெரிய பொதுக் கூட்டம்
இலங்கை தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் செய்திருக்கிற முத்துக்குமார், ரவி ஆகியோரின் அஸ்தி கலசங்கள் 9, 10 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் வீரவணக்கம் செலுத்துவதற்காக, சென்னை, பூம்புகார், ராமேஸ்வரம், திருச்செந்தூர், குமரி, பவானி, முக்கூடல் ஆகிய 6 இடங்களுக்கு எடுத்து செல்லப்படும். 10ஆம் தேதியன்று சென்னையில் அனைத்து தலைவர்களும் கலந்து கொள்ளக்கூடிய மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள், இலங்கை தமிழர்களுக்காக, தி.மு.க. சார்பில் ஒரு அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்களே? என்று கேட்டதற்கு பதில் அளித்த பழ.நெடுமாறன், நாங்கள் அதை போட்டியாக நினைக்கவில்லை. இலங்கை பிரச்சனையில் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பிறகும் இந்திய அரசு எதுவும் செய்யவில்லை என்றவுடன் அவர் அடுத்த நடவடிக்கைக்கு வந்திருக்க வேண்டும். அவர் அதை செய்யாத காரணத்தினால். நாங்கள் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரிலே அமைப்பை தொடங்கினோம் என்றார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய ராமதாஸ், என் மீது முதலமைச்சர் பழி சொல்கிறார். எந்த வகையில் இந்த ராமதாஸ் அவர்களுடைய ஆட்சியை கலைப்பான். காங்கிரசின் 35 பேர் ஆதரவு இருக்கும் வரைக்கும் எப்படி அவருடைய ஆட்சியை யார் கலைக்க முடியும். நிச்சயமாக கலைக்க முடியாது.
அமெரிக்காவும், இங்கிலாந்தும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளார்கள். அதற்கும் ராஜபக்சே உடன்படவில்லையே? என்ற கேட்டதற்கு பதில் அளித்த வைகோ, இந்திய அரசே இலங்கைக்கு பக்க பலமாகவும், போரை நடத்த சொல்லிக் கொண்டும் இருக்கிறது. அதனால்தான் அமெரிக்காவோ, இங்கிலாந்தோ, உலக நாடுகள் சொன்னாலும், இந்திய அரசு போரை நிறுத்த ஒப்புக்குக்கூட சொல்ல தயாராக இல்லை என்றார்.
ஜெயலலிதாவுக்கு எதுவும் தெரியவில்லை
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் போராட்டங்களுக்கு பிரதான கட்சியான தி.மு.க.வுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று கருணாநிதி கூறியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு பதில் அளித்த பழ.நெடுமாறன், அது தவறானது. அவருக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை அப்படியே வைத்துள்ளோம் (அப்போது அந்த நகலை செய்தியாளர்களிடம் காண்பித்தார்) என்றார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைய வேண்டும் என்று கூறியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு பழ.நெடுமாறன் கூறுகையில், அப்படி அவர் சொல்லியிருப்பது இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி அவருக்கு எதுவும் தெரியவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு. இலங்கையில் 30 ஆண்டுகாலமாக அறவழியில் போராடி, எதுவும் கிடைக்காத நிலையில், ராணுவ அடக்குமுறையை ஏவி விட்ட போது அந்த மக்களை பாதுகாப்பதற்காக, இளைஞர்கள் ஆயுதம் தூக்கினார்கள். விடுதலைப்புலிகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் இலங்கையில் ஈழத் தமிழினமே முற்றிலுமாக அழிக்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இப்போது விடுதலைப்புலிகள் ஆயுதத்தை கீழே போடுவார்களேயானால், அடுத்த நிமிடம் ஈழத் தமிழினம் ஒழிக்கப்பட்டு விடும் என்றார்.