எ‌தி‌ர்‌ப்பு‌‌க்‌கிடையே முதல் முறையாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டது

வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (10:01 IST)
சிதம்பரம் நடராஜர் கோயில் வரலாற்றில் முதல் முறையாக கோயிலுக்குள் உண்டியல் வைக்கப்பட்டது. இத‌ற்கு ‌‌தீ‌ட்‌சித‌ர்க‌ள் கடுமையாக எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளன‌ர்.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நடராஜர் கோயிலை தமிழக அரசு ஏற்றது. இதன்பின், கோயிலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. செயல் அலுவலர் அலுவலகம் திறக்கப்பட்டு‌ள்ளது. வளாகத்தில் உ‌ள்ள முட்புதர்கள் அகற்றப்பட்டது‌ட‌ன் நேற்று உண்டியல் வைக்கப்பட்டது.

WD
உண்டியல் வைப்பதற்கான அரசு உத்தரவு மற்றும் பெரிய உண்டியலுடன் அறநிலையத் துறை இணை ஆணையர் திருமகள், உதவி ஆணையர் ஜெகநாதன், செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் ஆகியோர், கோயிலுக்கு நேற்று காலை வந்தனர். அப்போது, தீட்சிதர்கள் வ‌ழ‌க்க‌றிஞ‌ர் சம்பந்தம் வந்து, 'உண்டியல் வைப்பது பற்றி நீதிமன்ற உத்தரவில் எதுவும் இல்லை. எனவே, உண்டியல் வைக்கக் கூடாது’ என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த அ‌திகா‌ரிக‌ள், 'அறநிலையத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அதன்படி, உண்டியல் வைக்கிறோம்’ எ‌ன்றன‌ர்.

அதன்பின், வழ‌க்க‌றிஞ‌‌ரிட‌ம் எழுத்து மூலமாக விளக்கம் கொடுத்தார் கோயில் செயல் அலுவலர். பின்னர், கோயிலுக்குள் பக்தர்கள் நின்று தரிசனம் செய்யும் சபை அருகே உண்டியலை வைத்தனர். அதில், உதவி ஆணையர் ஜெகநாதன் சீல் வைத்தார். இணை ஆணையர் திருமகள், முதல் காணிக்கை செலுத்தினார். ஏராளமான பக்தர்கள் காணிக்கை செலுத்தினர்.

கோயிலில் பூக்கடை வைத்திருக்கும் முத்துகிருஷ்ணன் என்பவர், உண்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 படிக்கட்டுகள் வழியாக செல்லும் கதவை மூடினார். அவரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்தனர்.

தீட்சிதர்களின் வழ‌க்‌க‌றிஞ‌ர்‌ சம்பந்தம் கூறுகையில், ‘நீதிமன்ற உத்தரவை மீறி அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள். நாங்கள் நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம்’ என்றார்.