தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்ட தமிழக அரசின் உத்தரவு செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர் பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மாணவர்கள் மத்தியில் அமைதியான சூழ்நிலை நிலவிடவில்லை என்றும், அதனால் கல்லூரிகள் மூடப்படுவதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது போன்ற சூழ்நிலை எங்கும் இல்லை.
இதுவரை எந்த கல்வி நிறுவனமும் முறையீடும் செய்யவில்லை. மேலும், கல்லூரிகளை மூடியது மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. வரும் மார்ச் மாதம் தேர்வுகள் நடைபெற உள்ளது. பல்வேறு பாடங்கள் இதுவரை நடத்தி முடிக்கப்படவில்லை. இதனால் தேர்வுகளை மாணவர்கள் சந்திப்பதில் சிக்கல் ஏற்படும்.
எனவே, அரசு பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.