இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சிங்கள அரசை கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 5வது நாளாக இன்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கமும், தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கமும் கடந்த மாதம் 30ஆம் தேதி முதல் தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகம் முழுவதும் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக 5வது நாளாக இன்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களின் புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. அத்துடன் 4வது நாளாக வழக்கறிஞர்களின் தொடர் உண்ணாவிரதப் போராட்டமும் இன்று நீடித்தது.
இதற்கிடையே பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்று, சாலை மறியலின் போது கைது செய்யப்பட்ட 23 வழக்கறிஞர்கள் நேற்று நள்ளிரவில் சொந்த பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று அதன் தலைவர் பால் கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் நாளை வரை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் வழக்கறிஞர் புகழேந்தியை தாக்கிய காவலரை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஊர்வலமாக சென்று நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர்களை பணிகளை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டனர். அதன் பிறகு நீதிமன்ற வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வளாகத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களை ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.