போலி கிரெடிட் கார்டு மூலம் லட்சக்கணக்கில் மோசடி: பெண் உட்பட 4 பேர் கைது
வியாழன், 5 பிப்ரவரி 2009 (11:01 IST)
போலி கிரெடிட் கார்டுகள் மூலம் லட்சக்கணக்கான ரூபாய்க்கு நகை, பொருட்கள் வாங்கி மோசடி செய்த பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பிரபுல் என்பவர் நகைக் கடை வைத்துள்ளார். சமீபத்தில் இவரது கடைக்கு வந்த 4 பேர் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ரூ.40 ஆயிரத்துக்கு நகை வாங்கிச் சென்றுவிட்டனர். ஆனால் அவர்கள் பயன்படுத்தியது போலியான கிரெடிட் கார்டு என்பது பிரபுலுக்கு பின்னர் தெரியவந்தது.
WD
இந்நிலையில், எழும்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் பிரபுல் நேற்று முன்தினம் மாலையில் சாப்பிடச் சென்றார். அப்போது மோசடி கும்பலைச் சேர்ந்த 4 பேரும் அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தார். உடனே சேத்துப்பட்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். காவல்துறையினர் விரைந்து வந்து அந்த 4 பேரையும் பிடித்தனர்.
விசாரணையில் அவர்களிடம் இருந்து ஏராளமான வெளிநாட்டு கிரடிட் கார்டுகள், போலியாக தயாரிக்கப்பட்ட கடவு சீட்டு (பாஸ்போர்ட்), ஓட்டுனர் உரிமம் நகல்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் அவர்கள் மத்தியக் குற்றப்பிரிவு காவலரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
விசாரணையில், இந்தக் கும்பலின் தலைவனாக செயல்பட்டது திருச்சியை சேர்ந்த சந்துரு (43) என்பது தெரியவந்தது. சந்துருவின் இரண்டாவது மனைவி ஜெர்சி, அவரது நண்பர்கள் திருச்சியை சேர்ந்த பிரபு, கேரளாவை சேர்ந்த பினு ஆகியோர் மோசடிக் கும்பலில் இருந்துள்ளனர்.
WD
காவல்துறையில் சந்துரு அளித்துள்ள வாக்குமூலத்தில், என் சொந்த ஊரான திருச்சியில் குடும்பத்தினர் உள்ளனர். நான் மட்டும் வியாபாரத்துக்காக சென்னை கொளத்தூர் ஜி.கே.எம்.காலனியில் வசித்து வந்தேன். திருச்சியை சேர்ந்த ஜெர்சியை காதலித்தேன். அவர் பிளஸ் 2 வரைதான் படித்துள்ளார். அவரது அப்பா சிவில் இன்ஜினியர். ஜெர்சியை சென்னைக்கு 2003ம் ஆண்டு அழைத்து வந்தேன்.
கடந்த ஆண்டு அவரை 2வது திருமணம் செய்து கொண்டேன். மெரினா பீச்சுக்கு வரும் ஒரு நபர், எங்களுக்கு போலி கிரெடிட் கார்டுகள் தருவார். அந்த கார்டுகளில் உள்ள பெயருக்கு போலியான ஓட்டுனர் உரிமம், கடவுசீட்டு தயாரிப்போம். பின்னர் அதில் எங்களது போட்டோவை ஒட்டி விடுவோம். கடைகளில் அடையாள அட்டை கேட்கும் போது, இதை காட்டுவோம். என் மீது ஏற்கனவே மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று கூறியுள்ளார்.