இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்து வரும் சிங்கள அரசை கண்டித்து தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சிங்கள அரசை கண்டித்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள், மாணவர்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, பூந்தோட்டம், நன்னிலம், கொரடாச்சேரி, மாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் நடத்தினர். இதில் 1000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்திய கம்யூனிஸ்டு சட்டமன்ற உறுப்பினர் பத்மாவதி தலைமையில் நன்னிலம் பேருந்து நிலையம் அருகே மறியல் செய்ய முயன்ற 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் மன்னார்குடி கீழ்பாலம் அருகே இந்திய கம்யூனிஸ்டு சட்டமன்ற உறுப்பினர் சிவபுண்ணியம் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் இலங்கை அரசை கண்டித்து கோஷமிட்டு சாலை மறியல் செய்தனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கும்பகோணம் அருகே வீடுகளில் கறுப்புக்கொடி
இதனிடையே இலங்கையில் ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும் இலங்கையில் போர் நிறுத்த செய்யக்கோரி மத்திய- மாநில அரசுகளை வலியுறுத்தியும் கும்பகோணம் அருகே சுவாமிமலையை அடுத்துள்ள நாககுடி, மருத்துவக்குடி, கள்ளிக்குடி ஆகிய 3 கிராமங்களில் உள்ள 250க்கும் மேற்பட்ட வீடுகளில் இன்று கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது.