இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கும் நாளை நடத்தும் பொது வேலை நிறுத்தத்திற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது என்று அக்கட்சித் தலைவர் ஆர். சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும், அங்கு போர் நிறுத்தம் ஏற்பட்டு அப்பாவித் தமிழர்கள் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் சேதம் விளைவிப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக நாளை தமிழகத்தில் நடைபெற இருக்கும் பொது வேலை நிறுத்தத்திற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.
கட்சியின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் இந்த போராட்டத்திலும், 7ஆம் தேதி அன்று நடைபெற இருக்கும் கருப்புக் கொடி ஊர்வலத்திலும் பெருவாரியாக பங்கேற்று, இவ்விரண்டு நிகழ்ச்சிகளின் நோக்கங்கள் முழு வெற்றி அடையச் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்விரு ஆர்ப்பாட்டங்களுக்கும் தமிழக மக்களும் முழு ஆதரவு அளித்து ஈழத் தமிழர்களுக்கு நமது ஒருமித்த உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று சரத்குமார் கூறியுள்ளார்.