ரயில், பேருந்துகளுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு: டி.ஜி.பி. ஜெயின்
செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (16:12 IST)
தமிழகத்தில் நாளை ரயில், பேருந்துகளில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயின் கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈழத் தமிழர் பிரச்சனைக்காக தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. இருப்பினும் மக்களின் சகஜ வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதற்கு தேவையான அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.
மத்திய- மாநில அரசு அலுவலகங்கள், அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள வாகனகள், அரசியல் கட்சி அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முழு அடைப்பையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ரயில் நிலையம், பேருந்து நிலையம் ஆகியவற்றில் அதிக அளவில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுபோல் பிரச்சனைக்குரிய பகுதிகளில் ரயில், பேருந்துகளில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
பேருந்தை வழிமறிப்போர், ரயிலை வழிமறிக்க முயல்வோர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திறந்து இருக்கும் கடைகளை மூடச் சொல்கிறவர்கள், அலுவலகங்களுக்குச் செல்கிறவர்கள் தடை செய்கிறவர்களை உடனடியாகக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்து இருக்கிறோம்.
மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் போராட்ட நடவடிக்கைகளை காவல்துறையினர் உடனடியாக முறியடிப்பார்கள். தமிழகம் முழுவதும் முழு அடைப்பு அன்று அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று டி.ஜி.பி. கே.பி.ஜெயின் தெரிவித்தார்.