இணைய உலகத்தின் அனுபவத்தை முழுமையாக மக்கள் புரிந்துகொள்ள உதவிட ‘தேடல்’ தளமான கூகுள், கணினி வசதியுடன் கூடிய பேருந்துடன் தமிழகம் முழுவதும் உலா வரப்போகிறது.
webdunia photo
WD
இணையத்தின் வாயிலாக தேவையான எந்தத் தகவல்களையும் சுலபமாக பெருவது எப்படி என்பதை விளக்கிட நாளை முதல் தனது தமிழக பயணத்தைத் துவக்கும் கூகுள் பேருந்து, தமிழ்நாட்டின் 15 நகரங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி, மக்கள் கூடும் பொதுவிடங்களிலும் நின்று இணையத்தின் முக்கியத்துவத்தை விளக்கும்.
இந்தப் பயணம் மார்ச் மாதம் 14ஆம் தேதிவரை நடைபெறும்.
இத்தகவலை சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் விளக்கிய கூகுள் இந்தியா நிறுவனத்தின் ஆராய்ச்சி-மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் பிரசாத் பாரத் ராம், தகவல், பொதுத் தொடர்பு, கல்வி, பொழுதுபோக்கு ஆகிய நான்கு முக்கிய துறைகள் தொடர்பான விவரங்களை மாணவர்களும், பொதுமக்களும் பெறுவது தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்படும் என்று கூறினார்.
webdunia photo
WD
“ஒருமுறை இணையத்தின் பயனை அறிந்தால் அதனை அவர்கள் மீண்டும் நாடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறிய பாரத் ராம், இணையத்தை சுலபமாக நாடும் வழிகளை இந்தப் பேருந்துக்குள் வரும் பயனர்களுக்கு உணர்த்தப்படு்ம் என்று கூறினார்.
இந்த முயற்சியை தமிழகத்தில் இருந்து துவக்குவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்த பாரத் ராம், இந்திய மொழிகளில் கூகுள் இணையத்தில் தேட வருபவர்கள் எண்ணிக்கையில் இந்தியும், தமிழும் முன்னனியில் இருப்பதாகவும், பல மாநிலங்களில் பேசப்படும் இந்தி மொழிக்கு இணையாக தமிழ் மொழி பயனர்கள் எண்ணிக்கை உள்ளது என்றும், எனவே இணைய பயன்பாட்டு ஆர்வம் அதிகம் உள்ள மாநிலத்தில் இருந்து இம்முயற்சியை தாங்கள் துவக்க முடிவெடுத்ததாகக் கூறினார்.
கூகுள் மேற்கொள்ளும் இந்த இணைய விழிப்புணர்வுப் பயணத்தில் தமிழ்.வெப்துனியா.காம் இணைகிறது. தமிழ் மொழியில் முன்னனித் தளமாக விளங்கும் எமது இணைய பல்கலைத் தளம் தமிழ் மொழியில் மட்டுமின்றி, 9 இந்திய மொழிகளில் தேடல் வசதியை அளித்துள்ள இணையத்தளம் என்பது குறிப்பிடத்தக்கது.