தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆதரவுடன் மனிதநேய மக்கள் கட்சி என்ற புதிய கட்சி உருவாக்கப்படுகிறது என்று அந்த கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் ஆதரவுடன் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக மனிதநேய மக்கள் கட்சியின் தொடக்க விழா மாநாடு வரும் 7ஆம் தேதி தாம்பரத்தில் நடக்கிறது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த கட்சி முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் என அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் வலிமையாக பாடுபடும். இந்த கட்சியில் முஸ்லிம்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் உறுப்பினர்களாகவும், நிர்வாகிகளாகவும் செயல்படலாம்.
கட்சியின் பொதுச் செயலராக அப்துல் சமது, பொருளாளராக ஹாரூன் ரஷீத் ஆகியோர் இருப்பார்கள். த.மு.மு.க. தொடர்ந்து சமூக சேவை அமைப்பாக செயல்படும் என்றார் ஜவாஹிருல்லா.