ச‌ட்ட‌ம்- ஒழு‌ங்கு‌க்கு கு‌ந்தக‌ம் ஏ‌ற்ப‌ட்டா‌ல் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்: டி.ஜி.பி. எச்சரிக்கை

த‌மிழக‌த்த‌ி‌ல் நாளை நட‌க்கு‌ம் முழு அடைப்பு அறிவிப்பை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி ச‌ட்ட ‌விரோத செய‌ல்க‌ளி‌ல் ஈடுப‌ட்டா‌ல் அவ‌ர்க‌ள் ‌மீது தே‌சிய பாதுகா‌ப்பு சட்டம் பாயும் என்று த‌மிழக கா‌வ‌ல்துறை தலைமை இய‌க்குன‌ர் (டி.ஜி.பி.) கே.பி.ஜெயின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

webdunia photoFILE
இது தொடர்பாக நேற்‌றிரவு அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கை‌த் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நாளை (புதன்கிழமை) மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்ட அறிவிப்பை ஒட்டி, புதன்கிழமையன்று மாநிலத்தில் குடிநீர், பால், மருத்துவம், மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் பாதிக்காத வண்ணமும், பேரு‌ந்து, ரயில் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் இடையூறு இல்லாமல் இயங்கவும், மத்திய- மாநில அரசு அலுவலகங்கள், வங்கிகள், பள்ளிகள், வணிக வளாகங்கள், அங்காடிகள், தொழிற்சாலைகள் முதலியவை வழக்கம் போல் செயல்படவும் சட்டம்- ஒழுங்கு பராமரிக்கப்படவும், தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் காவ‌ல்துறை‌யின‌ர் மேற்கொண்டுள்ளனர்.

மேலும், மாநிலம் முழுவதும் காவல் சட்டம் பிரிவு 30 (2) மற்றும் சென்னை மாநகர காவல் சட்டம் 41-ன் படி ஒழுங்குமுறை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அன்றைய தினம் ரயில் மற்றும் சாலை போக்குவரத்தை தடை செய்தல், அலுவலகங்கள் மற்றும் இதர பணிகளுக்கு செல்வோரை தடுத்தல், கடைகள், அங்காடிகள், பெட்ரோல் பங்குகள், தியேட்டர்கள் முதலியவற்றை மூட வற்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

முழு அடைப்பு அறிவிப்பை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி சாலை மறியல்களில் ஈடுபடுதல், உருவ பொம்மைகளை எரித்தல், அரசு பேரு‌ந்து‌க‌ள் மற்றும் பொதுசொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துதல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு சட்டம்- ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி செய்வோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை உள்பட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கே.‌பி.ஜெ‌யி‌ன் எச்சரிக்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.